பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரிய வழக்கு!

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரிய வழக்கு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான ஆணையை உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 8 ஆயிரம் பிளாஸ்டிக் ஆலைகள் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால், தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்த கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்குகள் தொடரப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com