சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து, கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால், பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு கொன்ற குழந்தையின் முட்டாள் தாத்தா.
பொதுவாகவே பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் வெயில் காலம். ஆகையால் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அந்த வெப்பம் ஆகாது மற்றும் குழந்தையின் அம்மாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படும். ஆடி மாதம் இணை சேர்ந்தால் பிறக்கும் குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும் என்று ஆடி மாதத்தில் தம்பதியரை பிரிப்பார்கள். இதுவே ஏற்றுக்கொள்ள கூடிய கால கட்டத்தில் நாம் இல்லை.
ஆனால் இந்த கூற்று, சித்திரையில் குழந்தை பிறந்தால் சங்கடம், தாத்தாவின் உயிருக்கு ஆபத்து, கடன் தொல்லை அதிகரிக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு கட்டுக்கதைகளாக மாறி இருப்பது மூட நம்பிக்கைகளின் உச்சக்கட்டமாகத்தான் தோன்றுகிறது.
இதன் விளைவே தற்போது நடந்துள்ள கோர சம்பவம். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவிற்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது.
இந்த தம்பத்திக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பின்னர் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் சங்கீதா ஆகியோர் தனது தந்தை வீடான வீரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 14-ஆம் தேதி இரவு தாய் சங்கீதா பிறந்த குழந்தையை தன் அருகே போட்டு தூங்கியுள்ளார். காலையில் பார்க்கும் போது குழந்தை தன் அருகில் இல்லை என தெரிந்து குடும்பத்தினர் அனைவரின் உதவியோடு குழந்தையை எல்லா இடங்களிலும் தேடி உள்ளார். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் அக்குழந்தை சடலமாக கிடைத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குழந்தையின் தாய் சங்கீதா, தாத்தா வீரமுத்து மற்றும் பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தி உள்ளனர்.
நீண்ட விசாரணைக்கு பின்னர், சித்திரை மாதத்தில் வீட்டின் மூத்த குழந்தை பிறந்தால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து, கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கைகளை காரணம் காட்டி, குழந்தையின் தாத்தாவான வீரமுத்துவே வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் அக்குழந்தையை போட்டு கொலை செய்து நாடகம் ஆடியது தெரிய வந்தது.
இதனை அடுத்து வீரமுத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இந்த காலக்கட்டத்திலும் ஏராளமாக நடப்பது சற்று வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.