

நம் அண்டை நாடான சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் உலகின் பல துறைமுகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில ஜென் குவா 29 என்ற 800 அடி நீளம் உள்ள சரக்கு கப்பல் ஒன்று அமெரிக்காவின் கல்பு கோஸ்ட் மற்றும் வட அமெரிக்கா நாடான ஜமைக்காவில் உள்ள துறைமுகங்களுக்கு கிரேன்களை கொண்டு சென்றது.
வழக்கமாக ஷாங்காயில் இருந்து மிசிசிபி வரை பசிபிக் பெருங்கடலை கடந்து பனாமா கால்வாய் வழியாக சென்றால் ஒரு மாதத்தில் சென்றடையலாம். ஆனால் இந்த கப்பலில் ஏற்றப்பட்ட கிரேன்களில் பூம்ஸ் எனப்படும் நீண்ட கைகள் கப்பலின் பக்கவாட்டில் வெளியே நீண்டு கொண்டு இருந்தது.
எனவே பனாமா கால்வாய் அதிகாரிகள் இதை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால் கப்பல் ஆப்பிரிக்காவின் தென்கோடியில் உள்ள கேப் ஆப் குட்ஹோப் வழியாக சுற்றி நீண்ட பாதையில் செல்ல வேண்டி இருந்தது. ஷாங்காயிலிருந்து ஜூன் 20 அன்று புறப்பட்ட கப்பல் மூசாம்பிக் கடற்கரையில் இரண்டு வாரங்களும், தென் ஆப்பிரிக்க கடற்கரையில் ஒரு வாரமும் நங்கூரமிட்டு இருந்தது.
பின்னர் ஆகஸ்ட்14-ம்தேதி ஆப்பிரிக்காவை சுற்றிய கப்பல் செப்டம்பர் 11-ல் மிசிசிபியின் கல்பு போர்ட் துறைமுகத்தை அடைந்தது. பின்னர் டெக்ஸாஸ் மற்றும் ஜமைக்காவின் கிங்ஸ்டன் துறைமுகத்தில் கிரேன்களை இறக்கியது. மூன்று மாதங்களில் 37 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து இந்திய அட்லாண்டிக் மற்றும் பசிபிக் என மூன்று பெருங்கடல்களைக் கடந்து இந்த கிரேன்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
கிரேன்களை இறக்கிய பிறகு வெறுமனே திரும்பியதால் பனாமா கால்வாய் வழியாக குறுகிய பாதையில் ஷாங்காய் வந்தடைந்தது. இதுவும் ஒரு சாதனை எனக் கூறப்படுகிறது.