சைபர் க்ரைமில் ஈடுபட்ட சீன நாட்டவரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது அவர் இந்தியர்களிடையே சுமார் 100 கோடி மோசடி செய்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் ஏராளமான சைபர் க்ரைம்கள்தான் நடந்துதான் வருகின்றன. பலரிடம் ஆசை வலை விரித்து, கோடி கணக்கில் வருமானம் ஈட்டலாம் போன்றவற்றைக் கூறி, அவர்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் முதல் போன் செய்து ஒரு பின் நம்பர் மூலம் வரை ஏராளமான கை வரிசையை கையில் வைத்திருக்கின்றனர். எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலுமே மக்கள் இந்த வலையில் விழத்தான் செய்கிறார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுரேஷ் அச்சுதன் என்பவர் சைபர் கிரைம் போர்ட்டலில் ரூ.43.5 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரில், பங்குச் சந்தையில் பயிற்சி எடுப்பதாகக் கூறி என்னை வகுப்பில் கலந்து கொள்ள வைத்தனர். பின்னர் அதில் முதலீடு செய்வதாக உறுதியளித்து என்னை ஏமாற்றி பலமுறை ஆன்லைனில் பணம் பெற்றனர். நான் அனுப்பிய பணம் பலரது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையுமே குற்றவாளிகளின் கணக்குகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வங்கிக் கணக்கு ஒன்றின் விவரத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி முண்ட்கா பகுதியில் வணிக வளாகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டை சேர்ந்த பாங் சென்ஜின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு மாநிலங்களிலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 17 வழக்குகள் இவர்மீது உள்ளன. இன்னும் இவர் என்னென்ன செய்திருக்கிறார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.