ஓசூரில் கிட்னி கல் பிரச்சினையால் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும்போது, மருத்துவ சாதனம் உடைந்து கிட்னியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், மருத்துவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வேறு மருத்துவமனைக்கு கைப்பட எழுதிய லெட்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓசூரை அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. 46 வயதான இந்த பெண்மணி நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதே ஊரில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கிட்னியில் 9 மில்லி மீட்டர் அளவில் கல் இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர், கடந்த ஜூலை 23ஆம் தேதி Stone Basket என்ற சாதனத்தின் உதவியுடன், சிறுநீர் பாதை வழியாக சிறுநீரகக் கல்லை உடைத்து எடுக்கும் அறுவை சிகிச்சை முறையை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, சிறுநீர் பாதையில் செலுத்தப்பட்ட மருத்துவ சாதனம் கிட்னியில் உடைந்து சிக்கிக்கொண்டது. எவ்வளவோ முயற்சித்தும் உடைந்த சாதனத்தை மருத்துவர்களால் வெளியே எடுக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, நடந்த விஷயத்தை கடிதமாக எழுதி ஜெயலட்சுமியை அவசர அவசரமாக அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூர் மருத்துவமனையிளும் கிட்னியில் சிக்கிக்கொண்ட சாதனத்தை எடுக்க முடியாததால், வேறு வழியின்றி ஓபன் சர்ஜரி செய்து ஸ்டோன் பேஸ்கட் கருவி அகற்றப்பட்டுள்ளது. மருத்துவரின் இந்த தவறான சிகிச்சையால் சிறுநீர் பாதை மோசமாக பாதிப்படைந்து, சிறுநீர் தானாக வெளியேறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை சார்பில் இந்த தவறுக்கு எவ்விதமான உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை. லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து, எப்படியேனும் நம் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பும் மக்களை இந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.