

தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் மாவட்டம் மல்லமுத்திரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சேலத்தில் நடக்க இருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் அது நடைபெற முடியாமல் போய்விட்டது என்றும், கட்சியின் தலைவர் மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடுவார் என்றும் கூறினார்.
தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், எஸ்.ஐ.ஆர் படிவங்களில் பெயர் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து, வீடு வீடாகச் சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காகவும் நாமக்கல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என தாவெகவின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ், தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, அதற்கு உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குழு அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. தி.மு.க., பா.ஜனதாவை தவிர எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்து செல்வோம் என்று கூறினார்.