

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார். இவரது கடைசி படமான ஜனநாயகன் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய்யின் சினிமா திரை பயணத்தில் 33 ஆண்டுகள் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு, அடுத்த 33 ஆண்டுகள் நான் ஆதரவாக இருக்கப் போகிறேன் என விஜய் தெரிவித்திருந்தார். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தவெக கூட்டணியை பலப்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் விஜய்க்கு அரசியல் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். விஜய்யின் கடைசி படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஹெச்.வினோத் கூறிய கருத்து விஜய் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் மற்ற கட்சிகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், தவெக நிர்வாகிகளை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் 3 நாட்கள் விசாரித்தனர். மேலும் தவெக தலைவர் விஜய்யை ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் முன்னணி அரசியல் நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, மேலும் சில அதிமுக நிர்வாகிகள் பொங்கலுக்குப் பிறகு இணைவார்கள் என்ற செய்தி பரவி வருகிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தவர் இயக்குநர் ஹெச்.வினோத். அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தைக் கூறி, விஜய்க்கு ஓர் அறிவுரையையும் வழங்கியுள்ளார் ஹெச்.வினோத்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகள். பொதுவாகவே நம்மைச் சுற்றி முட்டாள்கள், அறிவாளிகள், அறிவாளி அயோக்கியர்கள் மற்றும் முட்டாள் அயோக்கியர்கள் என 4 வகையான மனிதர்கள் இருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு சமாளித்தாலே வெற்றியைப் பெற்று விடலாம்.
அறிவாளிகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியும். முட்டாள்களுக்கு நல்லது, கெட்டது எதுவுமே தெரியாது. அறிவாளி அயோக்கியர்கள் நல்லது எது என்பதை தெரிந்து கொண்டு, அதனை பொதுவெளியில் சொல்லாமல், தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடிமையாட்களைப் போல மோசமான விஷயங்களையே செய்வார்கள்.
இந்த நான்கு வகையான மனிதர்களை நடிகர் விஜய் அடையாளம் கண்டு, சமாளித்தாலே போதும். அரசியலில் எளிதாக வெற்றி பெற்று விடுவார்” என இயக்குநர் ஹெச்.வினோத் அறிவுரைத்துள்ளார்.