

விண்வெளி ஆராய்ச்சிகளில் நிலவு மீதான ஆராய்ச்சியில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருக்கின்றன. மேலும் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவின் வசமுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், நிலாவில் வருகின்ற 2032 ஆம் ஆண்டுக்குள் பிரம்மாண்டமான ஹோட்டலை கட்டத் திட்டமிட்டுள்ளது.
கேலக்டிக் ரிசோர்ஸ் யூட்டிலைசேஷன் ஸ்பேஸ் (GRU) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வருகின்ற 2029 ஆம் ஆண்டில் நிலாவில் ஆடம்பர ஹோட்டலை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் 2032 ஆம் ஆண்டுக்குள் விருந்தினர்கள் வந்து தங்கும் படி ஹோட்டல் முழுமையாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ், ஒய் காம்பினேட்டர், என்விடியா மற்றும் ஆண்டூரில் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டு ஆதரவு பெறப்பட உள்ளது. வெறும் 21 வயதே நிரம்பிய இளம் பொறியாளரான ஸ்கைலர் சான் தொடங்கிய GRU ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் முதலீட்டு ஆதரவை தருவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்க முடியுமா? வீடுகள் கட்ட முடியுமா? ஹோட்டல்களை கட்ட முடியுமா? என்ற கற்பனை இருந்து வந்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இந்த கற்பனைக்கு நிஜ வடிவம் கொடுக்கும் வகையில், தற்போது புதிய ஆடம்பர ஹோட்டலை கட்ட அமெரிக்காவின் ஸ்டார்ட்அப் நிறுவனம் முன் வந்துள்ளது.
நிலாவில் ஹோட்டல் கட்டும் திட்டததின், ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக விண்வெளி துறை மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் GRU ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நிலாவில் கட்டப்படும் ஹோட்டலில் ஒரு இரவு தங்க சுமார் ரூ.4 லட்சம், அதாவது 10,000 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், முன்பதிவைத் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் முடிந்த பிறகு வருகின்ற 2029 ஆம் ஆண்டில் நிலாவில் ஹோட்டல் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இருப்பினும் பூமியில் ஒரு கட்டுமான பணியை மேற்கொள்வது போல் நிலாவில் ஒரு கட்டுமான பணியை அவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடியுமா என்பது இந்நிறுவனத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.
இருப்பினும் பல்வேறு கட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இந்த சவால்களை எதிர்கொள்ள GRU ஸ்டார்ட்அப் நிறுவனம் தயாராக உள்ளது. மேலும் நிலாவில் உள்ள மண்ணையே கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் பூமியிலிருந்து பொருட்களை நிலவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை குறையும்.
நிலவில் வெற்றிகரமாக ஹோட்டல் கட்டி முடிக்கப்பட்டவுடன், அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம் தான் என இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.