

பொதுமக்கள் மத்தியில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்ற மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சைபர் மோசடியில் ரூ.42,000 கோடிக்கும் அதிகமான பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். சைபர் மோசடிகளை தடுக்க பைசர் கிரைம் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் சைபர் குற்றங்களில் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால், சைபர் மோசடிகள் மிக எளிதாக நடந்து விடுகின்றன.
இதன் காரணமாக மோசடி கும்பல்களும் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பி பணம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் 11,000 கோடி ரூபாயை இந்திய மக்கள் சைபர் மோசடியில் இழந்தனர். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் மட்டும் 42,000 கோடி ரூபாயை சைபர் மோசடியில் இழந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சைபர் குற்ற மோசடிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சைபர் மோசடிகளைத் தடுக்க இந்தியன் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்கி வருகிறது.
இதுவரை பொதுமக்களிடம் இருந்து 23 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதில் கிட்டத்தட்ட ரூ.7,130 கோடிக்கும் அதிகமான பணத்தை சைபர் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் இனி சைபர் மோசடிகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இந்திய மக்கள் இழந்த பணத்தின் பட்டியல்:
2020 - ரூ.8.56 கோடி
2021 - ரூ.551 கோடி
2022 - ரூ.2,190 கோடி
2023 - ரூ.7,463 கோடி
2024 - ரூ.22,849 கோடி
2025 - ரூ.19,812 கோடி.
வழிகாட்டு நெறிமுறைகள்:
1. சைபர் மோசடியில் பொதுமக்கள் ரூ.50,000-க்கும் குறைவான பணத்தை இழந்திருந்தால், நீதிமன்ற உத்தரவு இன்றியே அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
2. சைபர் குற்ற மோசடி காரணமாக சந்தேகத்தின் பேரில் வங்கிகள் பணத்தை முடக்கி இருந்தால், அடுத்த 90 நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் முடக்கப்பட்ட பணம் தானாகவே விடுவிக்கப்படும்.
3. சைபர் மோசடியில் ஒருவர் பணத்தை இழந்து புகார் அளித்த பிறகு, அந்தப் புகாரை கையாள வங்கிகள் உட்பட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
4. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை சைபர் துறை அதிகாரிகள் தாமதிக்காமல் காலவரம்புக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சைபர் மோசடியின் சிக்கல் மற்றும் இழந்த தொகை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று படிநிலை அமைப்புகள் செயல்படும்.