வெறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு, 14 லட்சம் ரூபாய் கொடுத்து விஐபி நம்பர் பிளேட் வாங்கிய ஹிமாச்சலப் பிரதேச இளைஞரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹமீர்பூரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற இளைஞர், தனது புதிய ஸ்கூட்டருக்காக "HP21C-0001" என்ற விஐபி பதிவு எண்ணை வாங்க முடிவு செய்தார். இதற்காக மாநில போக்குவரத்துத் துறை நடத்திய ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்றார். இந்த ஏலத்தில் சஞ்சீவ் குமாருடன் மற்றொரு நபரும் பங்கேற்றுள்ளார். சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், 13.5 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்ட நிலையில், சஞ்சீவ் குமார் அதையும் தாண்டி 14 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த விஐபி நம்பரை கைப்பற்றியுள்ளார்.
தனது ஸ்கூட்டரின் விலையை விட 14 மடங்கு அதிகமாக நம்பர் பிளேட்டிற்காக செலவிட்ட இவரின் செயல் பலரையும் பேச வைத்துள்ளது. "ஆர்வம் (Passion) என்பதற்கு விலை நிர்ணயிக்க முடியாது. அசாதாரணமான ஒன்றை நீங்கள் விரும்பும்போது, அதற்கான செலவைப் பற்றி பார்ப்பதில்லை" என்று சஞ்சீவ் குமார் தனது முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரது மகன் தினேஷ் குமார், இது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஆன்லைன் ஏலம் வெளிப்படையாக நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், இந்தியாவில் வாகனப் பதிவு எண்களுக்கு மக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பலருக்கு இது வெறும் ஒரு பதிவு எண் அல்ல, அது ஒரு அந்தஸ்தின் அடையாளமாக, அதிர்ஷ்ட எண்ணாக அல்லது தனிப்பட்ட அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இவ்வளவு பெரிய தொகையை நம்பர் பிளேட்டிற்காக செலவிடுவதன் அவசியம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயினும், இந்த விஐபி நம்பர் பிளேட், ஹிமாச்சலப் பிரதேச அரசின் கருவூலத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டியுள்ளது.