
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரம் இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் விரும்பத்தகுந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்திற்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். அப்போது அருகில் உள்ள தனுஷ்கோடிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் ஒன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் பட்டுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு மிக அருகில் உள்ள தனுஷ்கோடி என்ற நகரம் 1964 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எழில் கொஞ்சும் நகரமாக காட்சியளித்தது. ஆனால் அதற்குப் பின்பு ஒரே இரவில் அந்நகரமே கடலுக்குள் மூழ்கியது. கடந்த 1964 ஆம் ஆண்டு வங்காள விரிகுடா கடலில் உருவான புயலால் தனுஷ்கோடி என்ற நகரமே இன்று இல்லாமல் போய்விட்டது. பள்ளிக்கூடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட பொதுமக்கள் வாழ்ந்த வீடுகள் என அனைத்தும் கடலோடு கடலாக தண்ணீரில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இரவில் புயலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
புயல் ஏற்பட்ட போது தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலும் கடலில் மூழ்கியது. புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல அந்நகரமே புயல் வந்து சென்ற பிறகு முழு அமைதியுடன் காட்சி அளித்தது. ஆனால் அன்னவரத்தில் ஒருவர் கூட மிஞ்சவில்லை என்பதுதான் பெரும் சோகம். இந்நிலையில் தனுஷ்கோடி நகரத்தை வாழத் தகுதியற்ற இடமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் கைவிடப்பட்ட நகரமாக தனுஷ்கோடி நகரம் அறிவிக்கப்பட்டு அந்நகரத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.
21ம் நூற்றாண்டில் தான் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி நகரத்திற்கு வர தொடங்கினர். அதன்பிறகு தனுஷ்கோடி என்ற நகரம் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது.
கடல் அரிப்பு காரணமாக தற்போது தனுஷ்கோடியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரை பாலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். வெளிவரத் தொடங்கியுள்ள தரை பாலத்தை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்புள்ளது.
அன்று கடலில் மூழ்கிய கட்டடங்கள், வீடுகள் மற்றும் பொருட்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரவும் வாய்ப்பு உள்ளது என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.