அலகு குத்தி கோயிலுக்கு வந்த பெண்ணுக்கு சாம்பிராணி தூபம் போட்ட இஸ்லாமியர்!

அலகு குத்தி கோயிலுக்கு வந்த பெண்ணுக்கு சாம்பிராணி தூபம் போட்ட இஸ்லாமியர்!

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பத்து நாட்கள் திருவிழாவான இந்த நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையும் தருணத்தில், இன்று பூக்குழி இறங்குதல், பால்குடம், வேல் காவடி, மயில் காவடி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து காப்பு கட்டியும், பால்குடம் எடுத்தும், வேல் காவடி, மயில் காவடி ஆகியவை எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முருகனுக்கு நேர்ந்துகொண்டு அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்ணுக்கு, இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி தூபம் போட்டார்.

மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றுதான், அனைத்துக் கடவுள்களும் ஒன்றுதான் என்பது போல் இஸ்லாமியர் ஒருவர், அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி தூபம் போட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி, அந்த இஸ்லாமியர் சாம்பிராணி போட்டு மந்திரங்களைச் சொல்லச் சொல்ல, அலகு குத்திய அந்தப் பெண் பக்தியின் உச்சத்துக்குச் சென்று சாமி வந்து ஆடவும் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com