இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தற்போது சண்டிபுரா என்ற கொசுக்களால் பரவும் தொற்றுப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தத் தொற்றினால், இதுவரை சுமார் 59 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவின் வயநாடு பகுதியில் இப்போதுதான் பெரிய அளவு நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. இது நாட்டையே உலுக்கிய சம்பவமாக இருந்து வரும் நிலையில், தற்போது மற்றொரு செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குஜராத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான மூளை அழற்சி நோய்க்குறி தொற்று ஏற்பட்டது. ஒரு மாதத்திலேயே இதில் 148 பேர் பாதிக்கப்பட்டனர். குஜராத்தின் 24 மாவட்டங்களில் இருந்து 140, மத்தியப் பிரதேசத்திலிருந்து 4, ராஜஸ்தானிலிருந்து 3 மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து 1 பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் (டி.ஜி.எச்.எஸ்) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்.சி.டி.சி) இயக்குநர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநர் ஆகியோர் இன்று இது குறித்து ஆய்வு செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டப் பிரிவுகள் மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்தான் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 59 என்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் இனி படிபடியாக இந்த தொற்று குறையும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொற்று பரவ ஆரம்பித்தவுடன், கொசுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான வசதி, குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை சரியான நேரத்தில் பரிந்துரைத்தல் போன்ற பல்வேறு பொது சுகாதார நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால்தான் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, உயிர் பலியும் குறைவானது என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.