கயிற்றின்மேல் நடக்கும் சாகச விளையாட்டில், வெகு தூரம் நடந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பல சாகச விளையாட்டுகள் உலகெங்கிலும் உள்ளன. உலக மக்கள் ஏராளமானோர் சாகசம் செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர். அதுவும் சிலர் அதில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.
அந்தவகையில் இத்தாலியில் உள்ள மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஸ்லாக்லைன் என்னும் கயிற்றுப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சர்க்கஸ் வீரர்கள் போல பயிற்சி பெற்ற சாகச வீரர்கள் மட்டுமே நடக்க முடியும் ஒற்றைக் கயிறு நடைப்பாலம் இது. இதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே நடந்து சாதனை பயணம் மேற்கொள்கிறார்கள்.
தற்போது இந்தக் காற்று வழி பாலத்தில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ் என்பவர் நீண்ட தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளார். அவர் கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார்.
இருந்தபோதிலும் கயிற்றுப்பாலத்தின் 3 ஆயிரத்து 566 மீட்டரை கடந்த அவர், எஞ்சிய 80 மீட்டரை கடப்பதற்குள் சமநிலையை தவறவிட்டு, கீழிறங்கிவிட்டார். இதனால், ஒரு முழமையான சாதனையை தவறவிட்டார். இருப்பினும் இதுவரை யாரும் இதுபோன்ற சாதனையை செய்யாததால், இதுவே கயிற்றுப் பயணத்தில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
அவர் கடலுக்கு மேலே நடந்தபோது 100 மீட்டர் உயரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.57 மணி நேரத்தில் இந்த தூரத்தை அவர் கடந்தார்.
இதனால், அவர் உலக மக்கள் வியக்கும் அளவிற்கு சாதனைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் சாகச வீரர்கள் இவரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில், இன்னும் முழுமையான சாதனையை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.