இந்த வாரம் ஒரு கிரிக்கெட் மைதான அளவு பெரிய கோள் பூமியை கடக்கும் என்றும், இன்று பூமியை மிகவும் நெருங்கி வரும் என்றும் நாசா செய்தி வெளியிட்டுள்ளது.
பூமியை சுற்றி எண்ணற்ற கோள்களும் துகல்களும் இருக்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவ்வப்போது இதுபோன்ற கோள்கள் பூமியை கடந்து வருகின்றன. மேலும் அந்த கோள்களால் பூமிக்கு ஏதேனும் சங்கடம் நெருங்குகிறதா? அப்படி நெருங்கினால் அதை எப்படி கையாள்வது என்பவனவற்றை நாசா கண்காணித்து வருகிறது. அந்தவகையில் தற்போது சுமார் 360 முதல் 660 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள், குதுப் மினாரை விட ஒன்பது மடங்கு பெரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மணிக்கு சுமார் 51,700 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். பூமியிலிருந்து சுமார் 6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து செல்லும். இந்த தூரம் விண்வெளி அளவில் மிக அருகில் எனக் கருதப்பட்டாலும், பூமிக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என நாசா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் 16 மடங்கு அதிகம்.
இந்த 2005 VO5 சிறுகோள் "அப்போலோ" வகையைச் சேர்ந்தது. இது பூமியின் சுற்றுப்பாதையை கடக்கக்கூடியது. இதுபோன்ற சிறுகோள்களின் இயக்கத்தை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது 1988 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு பூமிக்கு இவ்வளவு அருகில் வருவது இதுவே முதல் முறை. அடுத்ததாக 2062 ஆம் ஆண்டுதான் இந்த சிறுகோள் மீண்டும் பூமிக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானியல் நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு சிறுகோளின் பண்புகள் மற்றும் அதன் சுற்றுப்பாதையை ஆராய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இது ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.