அமெரிக்காவின் பல பகுதிகளை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில், இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகமாகியுள்ளன. வறட்சிப் பகுதிகளில் கூட வரலாறு காணாத மழைபெய்தது. இந்தியாவிலும் வட மாநிலங்களில் வறட்சி நிலவி வருகிறது. அதேபோல், தென்மாநிலங்களில் கனமழைப் பெய்து வருகிறது. ரஷ்யா போன்ற பெரிய நாடுகளிலும் வரலாறு காணாத மழை பெய்து, பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டது.
அந்தவகையில், அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது. இந்தப் புயலில் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்களும் சேதமடைந்தன. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. அந்த கட்டட இடிப்பாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கட்டட இடிப்பாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திலேயே பச்சிளம் குழந்தை உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், அங்கு கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த மக்கள் மின்சாரம் இல்லாமல், இருளில் இருந்து வருவதோடு, கோரப் புயலின் தாண்டவத்திலும் சிக்கியுள்ளனர். இடி, மின்னல், புயல் காற்று, மழை என அனைத்தும் ஒரே நேரத்தில் தங்கள் சக்தியை ஒன்றுத்திரட்டி வெளிப்படுத்துவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றும், நியூயார்க், பென்சில்வானியா, நியூ ஜர்ஸி போன்ற இடங்களில் மிக கனமழையும், ஒரு மணி நேரத்திற்கு 120 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.