முன்னணி நிறுவங்களில் ஒன்றான விப்ரோ, இளம் பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது 'Work Integrated Learning Program (WILP)' என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது விப்ரோ. இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
விப்ரோவின் இந்த WILP திட்டம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இளங்கலை படிப்பை முடித்த மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், மின்னணுவியல் அல்லது இயற்பியல் ஆகிய பிரிவுகளில் பி.சி.ஏ அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது 6.0 சி.ஜி.பி.ஏ பெற்றிருப்பது அவசியம். மேலும், பட்டப்படிப்பில் அடிப்படை கணிதப் பாடத்தை (Core Mathematics) படித்திருக்க வேண்டும். இதில் தேர்வாக மூன்று சுற்றுகளில் கலந்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் வணிகக் கலந்துரையாடல் ஆகிய மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். இந்த மூன்றிலும் தேர்வானால் மட்டுமே பணியில் சேர முடியும்.
இத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) விப்ரோவில் பணியாற்ற சம்மதித்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். பாதியிலேயே செல்லும் நிலை ஏற்பட்டால், போனஸ் தொகையை சில கணக்கின் அடிப்படையில் திரும்ப செலுத்துதல் வேண்டும்.
அப்படி தேர்வானவர்கள் முதலில் "ஸ்காலர் ட்ரெய்னிகள்” ஆக பண்ணியாற்றுவார்கள். சம்பளம் உதவித்தொகை என்ற முறையில் வழங்கப்படும். முதல் ஆண்டின் உதவித்தொகை 15,000 ரூபாயாகும். பின் இரண்டாம் ஆண்டில் ரூ.17,000, மூன்றாம் ஆண்டில் ரூ.19,000, நான்காம் ஆண்டில் ரூ.23,000 என உதவித்தொகை படிப்படியாக உயரும். இதனுடன், பணிக்குச் சேரும்போதே ரூ.75,000 ஒருமுறை போனஸாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது விப்ரோவில் பணிபுரியும்போதே, ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.டெக் பட்டம் பெற முடியும். இதன் முழு செலவையும் விப்ரோவே பார்த்துக்கொள்ளும். இதன்மூலம் வேலை மற்றும் உயர்படிப்பு என இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தைப் பார்வையிட்டு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செப்டம்பர் மாதம் 30ம் தேதி அன்று1.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது ஒரு பான் இந்திய பணி என்பதால், இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் பணி அமர்த்தப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.