
அத்தியாவசிய எண்ணெய் என்பது சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் அல்ல. அது தாவரங் களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறாகும். தாவரங்களின் பூக்கள், இலைகள், மரம், பட்டை, வேர்கள், விதைகள் போன்றவற்றிலிருந்து அத்தியாவசிய எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
நறுமண சிகிச்சை, அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் இயற்கை துப்புரவுப் பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் தனித்துவமான பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பயன்படுத்தும் விதம்:
அத்தியாவசிய எண்ணெய்களில் ஒரு சிறு துளியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனுடைய வாசனையை நுகரும்போது அது நரம்பு மண்டலத்தைத் தூண்டி புத்துணர்ச்சியூட்டும். உடலில் நேரடியாக தடவாமல் தேங்காய் எண்ணெயுடன் கலந்துதான் தடவ வேண்டும். இல்லை என்றால் தோல் எரிச்சல் ஏற்படக்கூடும். வாய் வழியாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
குழந்தைகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த எண்ணெய் வகைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.இந்த எண்ணையை பயன்படுத்துவதற்கு முன்பு கையில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பிறகு தான் உபயோகிக்க வேண்டும்.
1. லாவண்டர் எண்ணெய்:
ஒரு பக்கெட் தண்ணீரில் சில சொட்டுக்கள் லாவண்டர் எண்ணெயைக் கலந்து அந்த நீரில் குளிக்கலாம். தண்ணீரில் கலந்து ரூம் ஸ்ப்ரேவாக உபயோகிக்கலாம். படுக்கையில் சில துளிகள் தெளித்துவிடலாம். இது நல்ல தூக்கத்தைத் தூண்டும். உடலில் சிறிய தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள், பூச்சிக்கடிக்கு இதை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பூசலாம். தலைவலிக்கும்போது தேங்காய் எண்ணெயுடன் கலந்து கழுத்தின் பின்புறத்திலும், நெற்றிப் பொட்டின் இரு பக்கமும் தடவலாம். கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்ட உதவுகிறது.
2. தேயிலை மர எண்ணெய்;
இது உடலில் உள்ள சிறிய வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்புகளை குணப்படுத்துகிறது. தேங்காய் எண்ணையுடன் கலந்து உபயோகிக்கலாம். நகத்தில் இருக்கும் பூஞ்சை தொற்றை குணப்படுத்துகிறது. உச்சந்தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை தீர்க்க ஷாம்புவில் கலந்து உபயோகிக்க வேண்டும். வீடு துடைக்கும்போது சில துளிகள் சேர்த்தால் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சில சொட்டுக்கள் எடுத்து பருத்தித் துணியில் நனைத்து முகப்பருவில் நேரடியாக தடவலாம். விரைவாக முகப்பரு மறைய உதவுகிறது.
3. மிளகுக் கீரை எண்ணெய்:
புத்துணர்ச்சியூட்டும் இதனுடைய வாசனை தலைவலியை குணமாக்குகிறது. கழுத்தின் பின்புறத்தில் நெற்றிப்பொட்டுகளில் தடவிக்கொள்ளலாம். அதிக உடல் சோர்வாக இருக்கும் போது இதன் வாசனையை முகர்ந்தால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. சோர்வை எதிர்த்து போராடி உற்சாகமாக வைக்கிறது. குடல் பிடிப்புகளை குறைக்கிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியையும் குணப்படுத்துகிறது. வயிற்றில் தடவும்போது குமட்டல், அஜீரணம் போன்றவற்றை சரி செய்கிறது.
4. யூகலிப்டஸ் எண்ணெய்:
குளிர்காலத்திற்கு மிகவும் சிறந்த மருந்து இது. சளி காய்ச்சலின் போது சில சொட்டுகள் எடுத்து மூக்கின் அடியில் தேய்த்துக் கொள்ளலாம். உடலில் தடவும் முன்பு அதை தண்ணீரில் தடவிப் பயன்படுத்தவேண்டும். தசை வலி, வீக்கம் மற்றும் புண்கள், மூட்டு வீங்கி இருந்தால் தேங்காய் எண்ணுடன் கலந்து உபயோகிக்கலாம். பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
5. எலுமிச்சை எண்ணெய்;
எலுமிச்சையின் தோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் சருமத்தில் பூச ஏற்றது. மனப்பதட்டம், மனசோர்வைக் குறைக்கும். குமட்டலை நீக்கும். உடல் வலியை குறைக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காயங்களை குணப்படுத்தவும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகின்றன.
6. ரோஸ்மேரி எண்ணெய்;
இது பெரும்பாலும் ஷாம்புக்களில் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும்போது மயிர் கால்களைத்தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது. மூட்டு வலிக்கும் இதைப் பயன்படுத்தலாம்.