தென்னாப்பிரிக்காவின் விசித்திர பாம்பு ஒன்றைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எண்ணிய ஒரு ஆராய்ச்சியாளர், அந்த பாம்பாலேயே கடிக்கப்பட்டார். சிகிச்சை செய்துக்கொள்ளாமல், கடித்தப்பின் படிபடியாக என்னாகும் என்பதை ஆராய்ச்சி செய்துவிட்டு இறந்துவிட்டார்.
1957ம் ஆண்டு சிகாகோவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 76 சென்டிமீட்டர் பாம்பு இருந்து வந்தது. அந்த பாம்பை அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த ஒரு பாம்பு நிபுணர் கார்ல் பாட்டர்சன் ஸ்மிட் ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்காவின் பூமஸ்லாங் என்று சொல்லப்பட்ட பச்சை நிற பாம்புதான் அது. அந்த பாம்பின் தோல் மினுமினுக்கும் தன்மைக் கொண்டது. இந்த பாம்பிற்கு மலவாயில் பிரிவு இல்லை என்பது கார்லை மிகவும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. ஆகையால், இதனை ஆராய்ச்சி செய்தே ஆக வேண்டும் என்று எண்ணினார்.
அந்த பாம்பை சற்று அருகில் பிடித்து ஆராய்ச்சி செய்கையில், அவரின் இடது கட்டைவிரலை கடித்துவிட்டது. பின்னர் இரண்டு பற்கள் பதிந்தன. இதனையடுத்து அவர் எந்தவொரு மருத்துவ உதவியும் பெறாமல், அவரே உறிஞ்சி நஞ்சை எடுக்கத்தொடங்கினார். பாம்பு கடித்ததிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திலும் என்னென்ன நடக்கிறது என்பதை ஒரு டைரியில் எழுதத் தொடங்கினார்.
மினுமினுக்கும் தோல் கொண்ட அந்த அரிய வகை பாம்புகள் மனிதரை கொல்லக்கூடிய அளவுக்கு விஷம் கொண்டதல்ல என்று பாம்பு நிபுணர்கள் பலர் நம்பியதை இவரும் நம்பி சிகிச்சை பெறாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வாந்தி இல்லாத வலுவான குமட்டல் ஏற்பட்டது. 5.30 முதல் 6.30 மணி வரை 101.7 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் ஏற்பட்டது. அதனுடன் உடல் நடுக்கமும், கடுமையான குளிரும் ஏற்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. (ஆனால், அவர் பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வந்திருக்கும் என்று எண்ணினார்.) நள்ளிரவு 12.20க்கு சிறுநீர் கழித்ததாகவும், சிறிய அளவில் ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறியது. அதிகாலை 4.30 மணிக்கு ஒரு குவளை தண்ணீர் குடித்தார், அதைத்தொடர்ந்து வாந்தியோடு கடும் குமட்டலும் ஏற்பட்டது. இரவு உணவு செரிக்காமல் வெளிவந்தது.
இப்போது அவரிடம் மருத்துவ உதவி வேண்டுமா என்று கேட்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். காலை உணவருந்திய பின் சிறுநீர் கழிக்கவில்லை. ஒரு அவுன்ஸ் அளவுக்கு ரத்தம் ஒவ்வொரு 3 மணிநேரத்திலும் வெளியேறி கொண்டிருந்தது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிய தொடங்கியது. ஆனால் அதிக ரத்தம் வெளியேறவில்லை.
1.30 மணியளவில் மதிய உணவு சாப்பிட்ட அவர் பின் வாந்தி எடுத்தார். வேர்வையால் உடல் நனைந்தது. பின்னர் அவர் மனைவி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரது உடலின் இயக்கத்தை மீட்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. சுவாச மண்டலம் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவர் இறந்த ஒரு 20 ஆண்டுகளுக்கு பிறகுதான் பூம்ஸ்லாங் பாம்பு அதிக விஷமுள்ள பாம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.