தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 63 கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததால், அந்த நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது விதி. அந்த நாளில் மக்கள் எந்த வேலையும் செய்யாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அல்லது சில விதிகளுடன் வேலை இருக்கும்.
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தேசிய விடுமுறை தினமான ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யதனர். அதாவது, பணியாளர்களுக்கு முழு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதா? ஒருவேளை வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் தரப்படுகிறதா?, 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் சமர்ப்பித்து முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலும் நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த இடங்களில் மொத்தம் 71 கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 63 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த நிறுவனங்களில் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று நாமக்கல் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
71 நிறுவனங்களில் ஆய்வு செய்து அதில் 63 கடைகள் பிடிப்பட்டிருக்கிறது என்றால், தமிழகத்தின் அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்தால்? அவ்வளவுதான்…
இதுபோன்ற அதிரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் குறைய ஆரம்பிக்கும்.