இந்தோனேசியாவில் வீட்டின் கூரை வழியாக விழுந்தக் கல்லால் அந்த வீட்டு இளைஞர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். இதுகுறித்தான விரிவான செய்திகளைப் பார்ப்போம்.
திடீரென்று ஒரு அதிசயம் நடந்து வறுமையில் இருக்கும் நாம் கோடீஸ்வரரானால் எப்படி இருக்கும் என்று நம்மில் பலர் எண்ணியதுண்டு. ஆனால், அதெல்லாம் நடக்காது என்று கடந்துப்போய்விடுவோம். ஒருவேளை நடந்துவிட்டால், எப்படி இருக்கும்?
அப்படி ஒரு சம்பவம்தான் இந்தோனேசியாவில் நடந்திருக்கிறது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் உள்ள கோலாங்கில் என்ற ஊரில் வசித்து வரும் வாலிபர் ஜோஸ்வா. ஒருமுறை அவர் இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு கல் அவர் வீட்டின் கூரையை உடைத்து நடு வீட்டில் விழுந்திருக்கிறது. அவர் சத்தம் கேட்டு என்னவென்று பார்த்தால், ஒரு கல் வீட்டின் நடுவே பூமியை பிளந்து கொண்டு 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு சென்றிருந்தது .
அவர் அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தார். பார்த்த உடனே அது பூமியில் கிடைக்கக்கூடிய சாதாரண கல் இல்லை என்று மட்டும் தெரிய வந்தது. பின் அதனை ஆய்வு செய்ய அனுப்பியிருக்கிறார். அந்தக் கல் சுமார் 2 கிலோ எடையும் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்தது.
இந்தக் கல்லைப் பற்றி அறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரத் காலின்ஸ் என்பவர் உடனே இந்தோனேசியா சென்று அந்தக் கல்லை 14 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
கூரைப் பிச்சி பணம்தான் கொட்டும் என்ற பழமொழி உள்ளது. ஆனால், இங்கு கூரையை உடைத்து விழுந்தக் கல்லால் பண மழைக் கொட்டியிருக்கிறது. ஒரு கல் அவர் வாழ்க்கையையே மாற்றியது. ஒரே நாளில் அவர் 14 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
இவர் ஒரு சவப்பெட்டி செய்யும் தொழிலாளர் ஆவார். இது குறித்து அவர் கூறுகையில் "நான் சவப்பெட்டிகள் செய்பவன், அதில் எனக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கு மாறாக என் வாழ்க்கை மாறிவிட்டது கிடைத்த பணத்தில் நான் ஒரு தேவாலயம் கட்ட விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.