இந்தியாவின் முன்னணி பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் (Paytm), ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்களை வெகுமதியாக வழங்கும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தங்க நாணயங்களை டிஜிட்டல் தங்கமாக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், தினசரி செலவுகளை நீண்டகால சேமிப்பாக மாற்றும் ஒரு வாய்ப்பை நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1 சதவீதம் மதிப்புள்ள தங்க நாணயங்களை பெறலாம். ஸ்கேன் & பே, ஆன்லைன் ஷாப்பிங், பணம் அனுப்புதல், ரீசார்ஜ், பில் பேமெண்ட் மற்றும் வழக்கமான பேமெண்ட்களுக்கும் இது பொருந்தும். 100 தங்க நாணயங்கள் ஒரு ரூபாய் மதிப்புள்ள தங்கத்திற்குச் சமம். UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மற்றும் நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த வெகுமதி பொருந்தும்.
குறிப்பாக, UPI மூலம் கிரெடிட் கார்டு மற்றும் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது இரட்டிப்பு தங்க நாணயங்கள் கிடைக்கும். இந்தத் திட்டம் பண்டிகை சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தங்கம் வாங்குவது இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த தங்க நாணயங்களை டிஜிட்டல் தங்கமாக மாற்றுவதன் மூலம் எளிதாகச் சேமிக்க முடியும்.
இதுகுறித்து Paytm செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தங்கம் எப்போதும் இந்திய குடும்பங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், தினசரி பணப் பரிவர்த்தனைகளை நீண்டகால மதிப்புமிக்கதாக மாற்றுகிறோம். இது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணையாக உள்ளது," என்றார். மேலும், Paytm நிறுவனம் சமீபத்தில் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது டியூஷன் கட்டணம் மற்றும் பில்களுக்கான நினைவூட்டல்கள், மாதாந்திர செலவுகளின் அறிக்கை, தனிப்பயனாக்கப்பட்ட UPI ஐடி, பரிவர்த்தனைகளை மறைக்க அல்லது காண்பிக்க விருப்பம், எக்செல் அல்லது PDF வடிவத்தில் UPI அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்யும் வசதி, மற்றும் விரைவான பேமெண்ட்களுக்கான ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்டுகள்.
இப்படியான நிலையில், இந்தத் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் பயன் அளிக்கும் என்றும், நீண்டகால நிதிப் பாதுகாப்பை உருவாக்க உதவும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.