
அகில உலகத்தையும் ஆட்டுவிக்கும் செயற்கை நுண்ணறிவு – AI – இப்போதைய நடப்பு பேசுபொருளாகி விட்டதில் வியப்பில்லை. ஏஐ மூலம் பாதுகாப்பிற்கு ஆபத்து என்று பலரும் கூக்குரலிடுகின்றனர். ஆனால் அதையே பாதுகாப்பைப் பலப்படுத்த உபயோகப்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏஐ உதவும் என்பது அவர்களின் வாதம். நியூயார்க் நகரில் மட்டும் 9000 கோடி என்ற பெரிய எண்ணிக்கையில் சைபர் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவாம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ள டேடாக்களை – தரவுகளை – சில நேரத்தில் அலசி ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
நியூயார்க்கின் தொழில்நுட்ப ஆலோசகர் மாத்யூ ஃப்ரேஸர் ஏஐ பற்றி வெகுவாகப் புகழ்ந்து கூறுகிறார்.
மல்டி மாடல் ஏஐ என்பது இப்போதைய ட்ரெண்டாகி விட்டது. இதன் மூலம் ஏராளமான டெக்ஸ்ட் மெஸேஜஸ், வீடியோ, ஆடியோ ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அரசு அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் பாதிப்புகளை முன்னமேயே மல்டி மாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்; உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம்.
DEEP LEARNING என்ற ஏஐ கருவி உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. Google VEO என்பதன் மூலம் வீடியோக்களை ஏஐ எடுக்கலாம். இன்னும் மொத்தம் 45 ஏஐ கருவிகள் செயல்பாட்டிற்கு வந்து விட்டன.
Sophia என்பதை ஹான்ஸன் ரொபாடிக்ஸ் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் மனிதர்களின் குரல், சைகைகளை அது உணர்ந்து அப்படியே செய்து காட்டுகிறது.
ChatGPT புழக்கத்திற்கு வந்து இப்போது அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று. எழுதுவது, கற்பது, அதன் மூலம் புதிய படைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட வேலைகளை இது செய்கிறது. அனைவரும் தாங்கள் இதன் மூலம் செய்த படைப்புகளைக் காண்பித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதனுடன் இப்போது அனைவரும் நாடும் இன்னொரு ஏஐ கருவி Google Gemini.
இப்போது நிபுணர்கள் ஏஐ கருவிகளின் ஐக்யூவை 110 முதல் 120 என்று கணக்கிட்டுள்ளனர். அடுத்து இது 150 என்ற அளவிற்கு உயரப் போகிறது. அவ்வளவு தான், அப்போது இது மனித முயற்சிகளைத் தோற்க அடிக்கும் அளவு உயர்ந்து ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்கப் போகிறது.
உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் ஐக்யூ 160. எல்லோரும் ஐன்ஸ்டீன் ஆகும் காலம் நெருங்குகிறதோ? இந்த அளவை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் எட்டினாலும் மனித மூளையின் நுட்பத்தை அது ஒருபோதும் எட்டாது என்று பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது மனித குலத்திற்கே ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி தானே!