நமது அண்டை மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஹயாத் ரீஜென்ஸி என்னும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தின் நடுப்பகுதியில் 'சாயா பீடியா' என்ற பெயரில், கேரளாவின் பாரம்பரிய டீக்கடை சாயலில் ஒரு மிகச் சிறந்த சாயா கடையை நிறுவியுள்ளனர் ஹோட்டல் உரிமையாளர்கள்.
இந்தக் கடையில் தயாரிக்கப்படும் சுவையான டீ மழைக் கால குளிருக்கு இதமூட்டுவதுடன், பலரது இதயத்தில் பழங்கால தெருக்கடை அனுபவங்களை நினைவூட்டுவதாகவும் அமைகிறது. குறுகிய கால அமைப்பாக நிறுவப்பட்டுள்ள இந்தக் கடை பழைய கால தள்ளு வண்டியின் விசித்திரமான அமைப்பைப் பின்பற்றியதாக உள்ளது.
பழைய சாயா கடைகள், சக்கரங்களுடன், துருப்பிடித்த கண்ணாடி ஜாடிகள், மரத்தாலான கவுண்டர் பலகைகள் போன்ற தற்காலிக அமைப்புகளுடன் டீ வாசனையும் கலந்து உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் ஒரு எந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தன. அதன் சாயலில் சாயா பீடியா நிறுவப்பட்டதற்கான காரணம், ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள், கேரளா மற்றும் அதன் பழமையான உணவு கலாச்சார முறைகளையும் அறிந்து கொள்வதற்காக எனக் கூறப்படுகிறது.
"ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்தைக் காட்டி அதுவே கேரளாவின் அடையாளம் என்று கூறிக்கொள்ள விருப்பமில்லை. கேரளாவின் பழமையையும் அவர்கள் உணர்வதற்காகவே இந்த சாயா கடை நிறுவப்பட்டுள்ளது" என்கிறார் அதன் பணியாளர்களில் ஒருவர்.
இதில் உள்ளூர் தயாரிப்புகளான கிறிஸ்பி பழம் பொரி, தேன் மிட்டாய், முறுக்கு, அச்சப்பம், எள்ளுருண்டை, நரங்கா (லெமன்) மிட்டாய், கேஸ் மிட்டாய், புளி மிட்டாய் மற்றும் மிக்ச்சர் மிட்டாய் போன்ற அனைத்தும் விற்கப்படுகிறது. கண்ணாடி ஜாடிகளில் அடைத்து வைத்து பழைய பாணியில் தரப்படும் இந்த உணவுகள், 1990 களில் வெளிவந்த மலையாள திரைப்படங்களை நினைவூட்டுவதாக உள்ளன.
"இந்த உணவுகளுடன், கார சாரமான மிளகாய் சட்னியுடன் பருப்பு வடை, தேனில் முக்கிய பழம் பொரி மற்றும் சுகியன், புளிப்பான தக்காளி சட்னியுடன் காயா பஜ்ஜி, மொளகு பஜ்ஜி, வெங்காய பக்கோடா மற்றும் முட்டை பஜ்ஜி, தேங்காய் சட்னியுடன் உளுந்து வடை, கெச்சப்புடன் பஃப் போன்றவைகளையும் வழங்குகிறோம்.
அனைத்திற்கும் மேலாக கேரளாவின் சுவை மிகுந்த ஸ்ட்ராங் டீயான 'அடிச்ச சாயா'வும் (Beat and pour) இங்கு கிடைக்கும்" என்கிறார், ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப், செந்தில் குமார்.
ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இந்த ஃப்யூஷன் டீ ஸ்டாலில் சாயாவை குடிக்க விரும்புபவர்கள் திருவனந்தபுரத்திற்கு ஒரு குயிக் விசிட் அடியுங்க.