பத்தே நிமிடத்தில் ஆயிரம் ஏக்கர் வாழை மரங்கள் நாசம்!

பத்தே நிமிடத்தில் ஆயிரம் ஏக்கர் வாழை மரங்கள் நாசம்!
Published on

கடலூரில் நேற்று திடீரென வீசிய சூறைக்காற்றால் 1000 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. தமிழக அரசு நிவாரண தொகை வழங்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேற்று மாலையில் திடீரென மாறிய வானிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் சடாரென சூறைக்காற்று வீசியுள்ளது. ஜூன் மாதத்தில் இப்படி ஒரு சூறைக்காற்று வீசும் என்பதை எந்த விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை.இதில் கடலூரை அடுத்த ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக் குப்பம், வெள்ளக்கரை, அரசடிக் குப்பம், வழிசோதனைப் பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழையும் பெய்தது.

இதனால் அப்பகுதிகளில் பயிரிட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமானதை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பூவன்,ஏலக்கி,பேயன் உள்ளிட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இத்தனைநாள் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்ததாகவும் , அவை பலனின்றி போனதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைப்பயிர்கள் அனைத்தும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் நோக்கத்துடன் சாகுபடி செய்யப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் குலை தள்ளி அடுத்த மாதத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தவை. ஆயிரம் ஏக்கரில் 5 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அவற்றுக்காக செய்யப்பட்ட முதலீடு அனைத்தும் வீணாகி விட்டது. சேதமடைந்த வாழைப் பயிர்களின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகம் என்று விவசாயிகளால் கூறப்படுகிறது.

10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வீசிய சூறைக்காற்றில் 1000 ஏக்கரில் வாழைப்பயிர்கள் நாசமாகும் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை. இன்று லட்சக்கணக்கில் வாங்கிய கடன்களை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குமா? என்கிற கவலையில் உள்ளனர் வாழை விவசாயிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com