மகா கும்பமேளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்தான அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா பற்றி நம் அனைவருக்கும் தெரியும். உலகிலேயே மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவே ஆகும். இந்துக்களின் புனித நிகழ்வான இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி மக்கள் வருகை தருவர். இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனவரி 14ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா கடந்த 26ம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெற்றது. இதுவே உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக திகழ்கிறது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
பல கோடி மக்கள் கூடுவதால் அவ்வப்போது தீ விபத்து, கூட்ட நெரிசலில் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
குறிப்பாக விடுமுறை நாட்களான ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடுகின்றனர். இதனால் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டாலும், விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.
பக்தர்களுக்காக வாகன நிறுத்த வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். பலர் தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்த சோக நிகழ்வும் நடைபெற்றது.
கொஞ்சம் ஆயிரம் பேர் கூடி இருந்த இடத்தில்கூட சிறு பிள்ளைகள் தொலைய நேரிடும். கோடி கணக்கில் கூடும் இடங்களில் சொல்லவா வேண்டும். ஆம்! இந்த கும்பமேளாவில், 54, 354 பேர் காணாலம் போக, அரசு முயற்சியால் மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.
பல வருடங்கள் கழித்து சிறு பிள்ளையாக இருந்த போது தொலைந்த ஒருவர்கூட கும்பமேளாவில் தனது குடும்பத்துடன் இணைந்தார் என்ற செய்திகள் கூட வெளியாகின.
கும்பமேளா பகுதியில் 10 இடங்களில் டிஜிட்டல் கோயா பயா கேந்திரா மையம் அமைக்கப்பட்டது. அந்த மையம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முகம் கண்டறியும் சாதனங்கள், பன்மொழி ஆதரவு அளித்தவற்றின் உதவியுடன் செயல்பட்டது. அரசின் தீவிர முயற்சி மற்றும் என்.ஜி.ஓ அமைப்பினர் செயல்பாடுகளால் 50000 பக்தர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று இணைந்துள்ளனர்.