கண்களை கலங்கடிக்கும் தென்கொரிய சிறுவனின் காணொளி!

A video of a South Korean boy.
A video of a South Korean boy.

ன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வேலை வேலை என்றே ஓடிவிடுகிறது. இதனால் உறவுகளுக்குள் போதிய இணைப்பு இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக இதனால் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும்படியான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

“மை கோல்டன் கிட்ஸ்” என்ற தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அந்நாட்டில் மிகவும் பிரபலமானது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எபிசோட் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் நான்கு வயது சிறுவனிடம் தன் பெற்றோர் பற்றிய கேள்விகளை தொகுப்பாளர் கேட்கும்போது மனமுடைந்து அழுகிறான்.

ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் தனிமையில் தவிப்பதாகத் தெரிவிக்கிறார். உனக்கு அம்மா அப்பா இருவரில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டபோது, “எனக்கு தெரியவில்லை. எப்போதுமே வீட்டில் நான் மட்டும் தான் தனியாக இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள். எனது தந்தை எப்போதுமே என்னிடம் அச்சுறுத்தும் வகையிலேயே நடந்து கொள்வார். அவர் என்னிடம் அன்பாக பேச வேண்டும் என நினைக்கிறேன்” என அந்த சிறுவன் கூறினார்.

அந்த சிறுவனின் தாய் குறித்து கேட்டபோது, கண்ணீர் சிந்திய படி “அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்” என்று அந்த சிறுவன் சொல்லும்போது நம்முடைய கண்களும் குளமாகிறது. பின்பு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கிய சிறுவன், “நான் சொல்வதை என் அம்மா எப்போதுமே கேட்க மாட்டார். அவருடனும் எனக்கு விளையாட வேண்டும் என ஆசை. ஆனால் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார்” என அந்த சிறுவன் பதில் அளித்தார். 

இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குழந்தைகளை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் பெற்றுக் கொள்கிறீர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பெற்றோருக்கு எதிராக கூறுகின்றனர். குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்கவில்லை என்றால் எந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சான்றாக இந்த காணொளி அமைகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com