சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனிப்பாறையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரது உடல் துளி கூட கெட்டுப்போகாத நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சாகசப் பிரியர்கள் என்றாலே அவர்கள் அதிகம் விரும்புவது மலையேற்றம் தான். உலகில் உள்ள மிகப்பெரிய மலைகளில் ஏறுவதே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் நிலையில், அதில் பல ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது. மலையேறும் போது கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் கூட உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. சாகச விரும்பிகள் பயணம் மேற்கொள்ளும் மலைகள், உயரமாகவும், பனிகள் நிறைந்திருப்பதால் அங்கிருந்து உடலை மீட்டு வருவதும் முடியாததாகவே இருக்கிறது.
இப்படித்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடலை சமீபத்தில் சிலர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற மான் ஹாட்டான் சிகரத்திலுள்ள பனிப்பாறையில்தான், இந்த உடலை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த உடல் துளி கூட அழுகாத நிலையில் அப்படியே இருந்துள்ளது.
அந்த உடலை மீட்டு DNA பரிசோதனை மேற்கொண்டபோது, அது 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. உலக வெப்பமயமாதல் காரணமாக பல இடங்களில் பனிப்பாறைகள் அதிகமாக உருகி வருகிறது. பல ஆண்டுகளாக பணியால் சூழ்ந்திருந்த இடங்களும் இப்போது உருகி வருகிறது. இதனாலேயே கடந்த சில காலமாகவே பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேறும் வீரர்கள் மற்றும் பணிச்சறுக்கு வீரர்களின் உடல்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
தற்போது கண்டறியப்பட்ட நபர் 1986 இல் மாயமானவர் என்றும், அவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 38 வயதான நபர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் காணாமல் போன போதே தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்த நிலையில், பல நாட்களுக்குப் பிறகும் அவரது சலத்தைக் கண்டறிய முடியாததால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.
காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி வருவதால், பனிப்பாறையினுள் உறைந்துள்ள சடலங்கள் வெளிப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் காலநிலை மாற்றத்தால் எந்த அளவுக்கு மோசமான ஆபத்து ஏற்படும் என்பதையும் இது காட்டுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சுற்றியுள்ள பனியால் சூழ்ந்த மலைகள் இப்போது வேகமாக உருகி வருகிறது.