சொத்து பரிமாற்றம் என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் நடக்கிறது. முந்தைய காலங்களில் சொத்து விற்பனை மற்றும் வாங்குதல் என்பது அரிதாகவே நடக்கும். ஆனால் இன்று சொத்துக்கள் விற்பனை என்பது அடிக்கடி நடக்கும் ஒரு செயலாகி விட்டது.
குறிப்பாக முகூர்த்த நாட்களில் சொத்து விற்பனை மற்றும் வாங்குவது அதிகமாகவே இருக்கும். இதனால் முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவுத் துறையில் கூடுதல் டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சொத்துக்கள் அதிகளவில் பரிமாறினாலும், பட்டாவில் உள்ள தகவல்கள் முன்பைப் போலவே தொடர்கின்றன.
பட்டாவில் மேலும் சில கூடுதல் தகவல்களை சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெகு விரைவில் பட்டாவில் நில உரிமையாளரின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் வீடு மற்றும் மனை வாங்கும் போது பத்திரப் பதிவு செய்வது அவசியம். அதே நேரத்தில் பட்டா மாறுதலிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனால் பட்டா மாறுதல் பணிகளை மிகவும் எளிமையாக்க வருவாய் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி வெகு விரைவில் பட்டாவில் உரிமையாளரின் ஆதார் எண், சொத்தின் 4 எல்லைகள் மற்றும் விற்பனை பத்திர எண் ஆகியவற்றை சேர்க்க வருவாய் துறை முடிவெடுத்துள்ளது.
தற்போது வரை பட்டாவில் சொத்து இருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண், வகைப்பாடு, பரப்பளவு, நில உரிமையாளரின் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் மட்டுமே இருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த வடிவமைப்பில் தான் பட்டா வழங்கப்படுகிறது. வேறொருவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தாலும், இதே தகவல்கள் தான் இடம்பெறும்.
இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் நில மோசடிகள் அதிகம் நடப்பதால், ஆதார் எண் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை பட்டாவில் சேர்ப்பது அவசியமாகிறது. நீங்கள் ஒரு சொத்தை வாங்கும் போது பத்திரப் பதிவு மட்டுமின்றி, பட்டா மாறுதலையும் அப்போதே சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையேல் பட்டா மாற்றம் செய்ய மீண்டும் பத்திரப் பதிவுத் துறையை நாட வேண்டியிருக்கும்.
முன்பை விட தற்போது நிலங்களின் மீதான பரிமாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் பத்திரத்தில் உள்ள விவரங்களை, பட்டாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில விவரங்கள் பட்டாவில் மாறாமலேயே இருக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு அதிக குழப்பம் ஏற்படுகிறது.
இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காண வேண்டுமெனில் பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, அதில் கூடுதல் தகவல்களை சேர்க்க வேண்டியது அவசியம். சமீபத்தில் தான் பட்டா வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள தமிழக அரசு புதிய வசதியை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் பட்டாவில் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், “பட்டாவில் கூடுதல் விவரங்களை சேர்ப்பது பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்க உதவும். இதன்படி நில உரிமையாளரின் ஆதார் எண், சொத்தின் 4 எல்லைகள் மற்றும் பத்திர எண் ஆகியவற்றை சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள நில நிர்வாக ஆணையருக்கு வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.