

பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) கார்டுகள் இரண்டும் இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள மற்றும் நிதி ஆவணங்களாகும். பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண், வரி செலுத்துவதற்கு அவசியம்; ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்; இவை இரண்டும் இப்போது வருமான வரித்துறை தேவைகளுக்காக இணைக்கப்பட வேண்டும் (link) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும் காலக்கெடு வரும் டிசம்பர் 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. இதை செய்யவில்லை என்றால் ஜனவரி 1-ம்தேதி முதல் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும். அதன் பின்னர் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பது பற்றியும், ஆதார், பான் கார்டை இணைப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தனிநபர் அல்லது நிறுவனங்களின் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை பதிவு செய்வதற்காக வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் தான் பான் நம்பர்.
ஆதார், பான் கார்டை இரண்டையும் இணைப்பது தொடர்பாக வருமான வரித்துறை கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அக்டோபர் 2024-க்கு முன்பு ஆதார் கார்டு பயன்படுத்தி பான் கார்டு வாங்கியவர்கள் இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் உடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
மற்ற தனி நபர்களுக்கு கடந்த ஆண்டு(2024) மே மாதம் 31-ம்தேதியுடன் நிறைவடைந்தது. இதுவரை இணைக்காதவர்கள், தற்போது பான் கார்டுடன் ஆதாரை இணைத்தாலும் கூட ரூ.1000 அபராத தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் இதையும் செலுத்த தவறியவர்கள் வரும் ஜனவரி 1-ம்தேதி(2026) முதல் உங்களது பான் கார்டு முடக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வேளை உங்களது பான் எண் செயலிழந்து விட்டால் என்ன நடக்கும்..
பான் நம்பர் முடக்கப்பட்டால்...
* உங்களால் வங்கிக்கணக்கு எதுவும்தொடங்க முடியாது.
* பங்குச்சந்தை வர்த்தகம் செய்ய முடியாது
* அரசு திட்டங்கள் எதற்கும் உங்களால் விண்ணப்பிக்க முடியாது.
* வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் உங்களால் கடன் வாங்க முடியாது
* புதிதாக வீடு, வாகனம் வாங்க முடியாது.
* வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. ஒருவேளை இதற்கு முன் தாக்கல் செய்திருந்தாலும் ரீபாண்டு கிடைக்காது.
* வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.
- இது போன்ற பல சிக்கல்கள் உங்களுக்கு வரும்.
பான்-ஆதாரை ஆன்லைனில் இணைப்பது எப்படி?
வருமான வரித்துறையின் இணையதளமான https://www.incometax.gov.in என்ற பக்கத்திற்கு சென்றால் உங்களது இடது பக்கத்தில் Link aadhaar என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்தால் உங்களுடைய பான் எண், ஆதார் எண்ணை கேட்கும். அதை உள்ளீடு செய்து சரிபார்க்க வேண்டும்.
அப்படி நீங்கள் சரிபார்க்கும் போது ஏற்கனவே உங்களது பான் எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே உங்களுடைய நம்பர் இணைக்கப்பட்டு விட்டது என்று மெசேஜ் வரும்.
ஒருவேளை இணைக்கப்படவில்லை எனும் பட்சத்தில் மொபைல் நம்பர் கேட்கும், அதில் உங்களது மொபைல் நம்பரை உள்ளீடு செய்தால் உங்கள் போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை பதிவிட்டவுடன் பான் மற்றும் ஆதார் இணைந்து விடும்.
SMS மூலமாக இணைப்பது எப்படி?
UIDPAN<SPACE><12இலக்க ஆதார் எண்><SPACE><10 இலக்க பான் எண்>
உதாரணமாக- UIPAN 123456248716 ACBFR1323F என்று டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் SMS அனுப்பக்கூடிய மொபைல் எண் உங்களுடைய ஆதாருடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் SMS அனுப்பினாலும் கூட மற்றொரு நிபந்தனை இருக்கிறது. அதாவது ஏற்கனவே பான், ஆதார் இணைப்பதற்கான காலம் நிறைவடைந்து விட்டதால் www.incometax.gov.in என்ற வருமானவரித்துறையில் இணையதளத்திற்கு சென்று ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.
ஒருபுறம் SMS அனுப்பி கோரிக்கை விடுத்தாலும் கூட incometax.gov.in என்ற தளத்தில் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயம். அப்படி செலுத்தினால் மட்டுமே உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
அதன் பிறகு https://www.incometax.gov.in என்ற தளத்திற்கு சென்று இடது புறத்தில் ‘Link Aadhaar status’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது கோரிக்கை நிலை எப்படி உள்ளது என்ற அப்டேட்டை அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காமல் விட்டு விட்டால் ஜனவரி 1-ம்தேதி முதல் உங்களது பான் கார்டு செயலிழந்து விடும். ஒருமுறை அப்படி செயலிழந்து விட்ட பான் எண் மறுபடியும் செயல்பாட்டிற்கு வர ஒரு வாரத்தில் இருந்து ஒருமாத காலம் வரை ஆகிவிடும்.
இதுவரை பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே செஞ்சிடுங்க. செய்தோமா இல்லையா என்ற சந்தேகம் உள்ளவர்கள் மேலே உள்ள வருமானவரித்துறை இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பான் எண்ணுடன், ஆதார் எண்ணை பதிவு செய்தால் போதும் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் காட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.