

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா எளிய மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இளைஞர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசியதால், தனது கட்சியினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளானவர். இன்று அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய தலைவர் நித்தின் நபின் முன்னிலையில் , தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகவ் சத்தா , "ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார். சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் இணைந்துள்ள நிலையில் , சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா மற்றும் விக்ரம் சாஹ்னி உள்ளிட்ட பலரும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளார்
மேலும் , தனது வாழ்வில் 15 ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு உழைத்துள்ளேன். தற்போது கட்சி நேர்மையான பாதையில் இருந்து விலகி ஊழல்பாதைக்கு சென்றுவிட்டது. நான் நல்லவன் என்றாலும் தவறான கட்சியில் இருந்து உள்ளேன். நான் அந்த கட்சியை விட்டு விலகி மக்களுடன் நெருங்கி பழக உள்ளேன்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி , "ஒரு கட்சியின் மூன்றில் இரண்டும் மடங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணையலாம். இவ்வாறு இணையும் பொழுது அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது . இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ளோம்" என்று ராகவ் தெரிவித்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சியில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அவர்களில் 7 பேர் பாஜகவில் இணைகின்றனர்.
பாஜகவில் இணைய உள்ள சுவாதி மாலிவால் இடா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கை காட்டியதும் , தன்னைக் கொடூரமாக அங்கு உள்ளவர்கள் தாக்கியதாகவும் , தான் அநாகரீகமாக நடத்தப்பட்டதாகவும் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
தன்னை தாக்கியவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை பாதுகாப்பதற்காக அவருக்கு உயர்பதவிகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார். தன்னை அழித்து விடுவதாகவும் சிலரை வைத்து மிரட்டியதாகவும் சுவாதி மலிவால் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் ஆம் ஆத்மி கட்சியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் துன்புறுத்தல்கள் அதிகரித்துவிட்டதாகவும் , ஊழல் ,ரவுடிகளுக்கு ஆதரவு போன்ற செயல்களினால் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.