

ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளதாகவும், இதனால் பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியானது.
மேலும் இது குறித்து தமிழக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: ஆவின் பால் தினசரி கொள்முதல் தற்போது 26 லட்சமாக இறங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கொள்முதல் விலை உயர்த்தாதது ஆகும்.ஆவினின் நஷ்டத்தை சரி செய்ய கொள்முதல் விலை, விற்பனை விலையை உயர்த்தினால் பாலை தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும். எனவே, கொள்முதல் விலையை ரூ.6-ம், விற்பனை விலையை ரூ.10-ம் உயர்த்த வேண்டும். பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை ரூ.2 உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை முழுவதும் அனைத்து வகையான பால் வகைகளையும் ஆவின் நிறுவனம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து விநியோகிக்கிறது.எந்தவொரு பால் வகையின் விநியோகத்திலும் குறைப்பு ஏதுமில்லை. வழக்கமான தேவை மற்றும் நுகர்வோரின் தற்போதைய தேவைக்கேற்ப பால் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த சில தினங்களில் மட்டும், கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வரை குறைவு, சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி, மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 60 சதவிகிதம் பால் தர விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படை தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும். ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால், மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும். இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு. அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும்.
ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்க தொகையை வழங்காததால், பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து, அதிக உற்பத்தி செலவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்து, நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
இனியும் மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டம் ஏதும் இருந்தால். அதை கைவிட்டு, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாக பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், அமுல் போன்ற பிற மாநில பால் கூட்டுறவு நிறுவனங்களை போல ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.