
தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்து விடலாம் என்று கூறியவர் மஹாகவி பாரதியார். பல தரவுகளின் சோதனைகளின் அடிபபடையில் உலகளாவிய மக்களின் பட்டினி விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பட்டினியில் வாடும் மக்களை குறைப்பதில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்றும் சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இதன் காரணமாக 2030க்குள் 'ஒருவர் கூட பட்டினியில்லை' என்ற ஐநாவின் இலக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
36 நாடுகளில் பட்டினியின் அளவு இருந்தாலும் கூட புருண்டி, சாட், மடகாஸ்கர், சோமாலியா, தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட 6 நாடுகளில் ஆபத்தான அளவில் பட்டினியின் அளவு உள்ளது. GHI (Global Hunger Index) தரவுகள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தைகளுக்கு உணவின்மை மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டு அறிக்கையின் படி சோமாலியா 44.1 மதிப்பெண்களுடன் மிக மோசமாக உணவில்லாமல் உள்ளது.
ஐரிஷ் மனிதாபிமான அமைப்பான கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மன் உதவி நிறுவனமான வெல்த் ஹங்கர் லைப் (WHL) ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் 10, 2024 அன்று வெளியிட்ட அறிக்கையின் படி 'பாலின சமூகநீதி, காலநிலை மீள்தன்மை ஆகியவை பசியின்மை நிலையை மேம்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
சஹாரா பாலைவன நாடுகள் மற்றும் தெற்காசியாவில் பட்டினி மிகவும் கடுமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சஹாரா ஆப்பிரிக்காவின் உணவின்மை அளவுகள், இதுவரை எந்தப் பிராந்தியத்திலும் இல்லாத அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா மற்றும் சாட் ஆகிய இரண்டும் மோதல்கள், மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பசியின்மையை அவர்களால் பெருமளவில் குறைக்க முடியவில்லை. ஏமன் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கர் அசாதாரண சுற்றுச்சூழல் பிரச்சினைகளினால் சவால்களை எதிர்கொள்கிறது.
தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான உணவுத்தரம், பொருளாதார சவால்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளின் பெருகிய முறையில் பேரழிவு தாக்கம் ஆகியவற்றால் பாதிப்பட்டுள்ளது. உலகளவில் 42 நாடுகள் ஆபத்தான அல்லது கடுமையான பட்டினியை அனுபவித்து வருவதாக 2024 ஐநாவின் அறிக்கை காட்டுகிறது.
இந்த நாடுகளில் பட்டினி அதிகமாக இருந்தாலும் கூட பங்களாதேஷ், மொசாம்பிக், நேபாளம், சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் GHI மதிப்பெண்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் அடைந்துள்ளன.
உலகில் சஹாரா பகுதியே மிக அதிக பட்டினி அளவைக் கொண்டுள்ளது.
2015 லிருந்து 2023 வரை மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில், தொடர்ச்சியான மோதல்கள், பணமதிப்பு நீக்கம், உயரும் பணவீக்கம், உற்பத்தி தேக்கநிலை மற்றும் வர்த்தக தடைகள் போன்ற பொருளாதார சவால்கள் அவர்களுக்கு கடுமையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக உயர்ந்தது.
2022 ஆம் ஆண்டில், சஹாராவின் தெற்கு பகுதி ஆப்பிரிக்காவில் உள்ள 72% மக்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியவில்லை. உலகளவில் 73.3 கோடி மக்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போதுமான உணவுகளை உண்ண வில்லை. மேலும் உலகம் முழுக்க 280 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்கும் அளவில் அவர்களின் பொருளாதாரம் இல்லை.
சண்டை நிறுத்தம், காலநிலைக்கு தகுந்தவாறு பயிரிடுதல், விவசாய உற்பத்தி அதிகரிப்பு, உணவுப் பொருட்கள் பாதுகாப்பு, சரியான உணவு முறைகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பராமரிப்பு, உணவில் பாலின சமத்துவம் ஆகியவை பசியின்மையை குறைக்கும்.