1987 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாளில், முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் ‘வறுமை ஒழிப்பு நாள்’ கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் ஆகியவைகளுக்குப் பழியானோரைச் சிறப்பிக்கும் வைகையில் 1,00,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள். அதன் பிறகு, உலகளாவிய நிலையில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாளை ‘உலக வறுமை ஒழிப்பு நாள்’ (International Day for the Eradication of Poverty) என்று கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்தது.
வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும். பல நாடுகளில், முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்து வருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.
வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவேக் கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. எனினும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள் சார் வறுமை நிலையை ஏற்றுக் கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோப் பாதிக்கின்றன. இது வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
வறுமையை முற்றிலும் வறுமை (Absolute Poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை (Relative Poverty) என்றும் இரு வகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளாகும்.
வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனைப் பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடையும் போது ‘வறுமை ஒழிப்பு’ நிச்சயம் நிறைவேறும். ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பதற்கேற்ப வாழ்வியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாக இருக்கும் வறுமை, பொருளாதார ரீதியான தட்டுப்பாட்டைக் கொண்டு மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. வறுமை நிலை என்பது உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், அடிப்படையான மனித அரசியல் உரிமைகள் ஆகிய நிலைகளை உள்ளடக்கியது.
1995 இல் கோபன்ஹேகன் சமூக உச்சி மாநாட்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட வறுமை ஒழிப்புக்கான ஐக்கிய நாடுகள் அவை (1997-2006) வறுமை ஒழிப்பிற்கான முயற்சிகளைத் தொடர்ந்தன. 2000 ஆம் ஆண்டு மில்லினியம் உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்கள் 2015 ஆம் ஆண்டிற்குள் தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க உறுதி பூண்டனர். இதன் வழியாகம் வறுமை ஒழிப்பில் பல நாடுகள் சிறிது முன்னேற்றம் அடைந்தன. இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று, உலக முழுவதும் பலரையும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் கொண்டு சென்றது.
தற்போதைய நிலையில், உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். 2020 ஆம் ஆண்டில், உலகைத் தாக்கிய கொரோனா நோய்த் தொற்று 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்குத் தள்ளி உள்ளதாகவும், தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் பெரும்பான்மையினர் ஏழைகளாக மாறியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமான செயல்பாடாக வறுமை ஒழிப்பு என்பது கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டியது. ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடைந்து ‘வறுமை ஒழிப்பினை' திட்டமிட்டு செயல்படுத்துவது அவசியமாக இருக்கிறது. இந்தியாவில் வறுமை ஒழிப்பிற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தேசியப் பல பரிமாண வறுமைக் குறியீடு (National Multidimensional Poverty Index) முன்னேற்ற மதிப்பாய்வில், வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது 2015-2016 மற்றும் 2019-2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் 13.5 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல பரிமாண ஏழைகளின் சதவீதத்தை 24.85% எனும் அளவிலிருந்து 14.96% ஆகக் குறைத்துள்ளது. வறுமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியா ஒரு மையப் புள்ளியாக இருந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வறுமை அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளாக, இந்தியாவில் உள்ள சில முக்கிய வறுமை ஒழிப்புத் திட்டங்களாகக் கீழ்க்காணும் திட்டங்களைக் குறிப்பிடலாம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA)
இந்தியாவின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியின் போது மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)
இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்க முயல்கிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சியின் மூலம், போதுமான வீடுகள் இல்லாமல் இருந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் மில்லியன் கணக்கான வீடுகளை வழங்கியுள்ளது.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM)
பெண்களுக்கு அதிகாரமளிப்பதை இலக்காகக் கொண்டு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சுய உதவிக் குழுக்களை (SHGs) உருவாக்கி, தொழில் முனைவோரை எளிதாக்குகிறது, சேமிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY)
கோவிட்- 19 தொற்று நோய்களின் போது தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பூட்டுதல் மற்றும் பொருளாதார மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிதி உதவி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்கியது.
இந்தத் திட்டங்கள் போன்று, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் வழியாக, வறுமையைக் குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை இங்கு கருத்தில் கொள்ளலாம்.