

தமிழகத்தில் நலிவடைந்த மகளிர் மின்சார (EV Auto)ஆட்டோ வாங்குவதற்காக கூட்டுறவு வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டிற்கும் (2026) நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 600 பெண்கள் பயனடைந்த இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வருமான சான்று, குடும்ப அட்டை, அடையாள ஆவணங்கள் மற்றும் EV ஆட்டோ விலை மதிப்பீடு ஆகியவற்றுடன் கூட்டுறவு வங்கி அதிகாரிகளை அணுக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, நலிவடைந்த பெண்கள் சுயதொழில் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மின்சார ஆட்டோ வாங்குவதற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 23 மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க, 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தொடரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ கடன் திட்டத்திற்கான தகுதிகள்
சுயதொழில் மேற்கொண்டு வருமானம் ஈட்ட விரும்பும் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
* தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
* விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் பெண் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயம்.
தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கடன் பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டை,
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு),
வாக்காளர் அடையாள அட்டை அல்லது முகவரிச் சான்று,
வருமானச் சான்றிதழ்,
வங்கிக் கணக்கு விவரங்கள்,
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,
வாங்கவுள்ள மின்சார ஆட்டோவுக்கான விலை மதிப்பீடு (Price Quotation).
மின்சார ஆட்டோவிற்காக விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் முதலில் அருகிலுள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்று அங்கு கடன் விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதனுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு கடன் ஒப்புதல் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் இத்திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதமாக 9 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகமான பெண்கள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். எனவே, இந்தாண்டில், 1,000 பேருக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள பெண்கள் அருகிலுள்ள கூட்டுறவு வங்கியை அணுகலாம்.
மேலும், தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.