

தற்போது படித்த பெண்கள் அலுவலக பணிகளுக்கு செல்லும் நிலையில் சுயதொழில் புரிவதிலும் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர் . அப்படி சுயதொழில் புரிவோர் நிச்சயம் கடன் வாங்கும் நிலை ஏற்படும் .அப்படி வாங்கிய கடனில் 50% அதாவது பாதி மட்டுமே செலுத்தினால் போதும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் அதற்கான திட்டம் தான் மத்திய அரசின் உத்யோகினி யோஜனா திட்டம்.
மத்திய அரசால் பெண்கள் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட பல நலத்திட்டங்களில் பெண்களை சுயதொழில் முனைவோராக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒரு அருமையான திட்டம் உத்யோகினி யோஜனா திட்டம் . இத்திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் சொந்த தொழிலை தொடங்க குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு வாங்கிய கடனில் பாதி மட்டுமே செலுத்தும் வகையில் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ. 3 லட்சம் கடனில் பாதி தொகையான ரூ. 1.5 லட்சத்தை மட்டுமே திருப்பிச் செலுத்தினால் போதும் என்பது சிறப்பு. பொதுப்பிரிவு மற்றும் இதர பெண்களுக்கு அதிகபட்சம் 30% வரை மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் , பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு முற்றிலும் வட்டியில்லா கடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சில சிறப்பு பிரிவினருக்கு முற்றிலும் வட்டியில்லா கடன்களை தரும் இத்திட்டத்தில் பிற பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் சுமார் (10 லிருந்து 12 சதவீதம் வரை) கடன் வழங்கப்படுகிறது. மேலும் எவ்வித அடமானமும் இல்லாமல் எளிதாக இந்தக் கடனை பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறத் தேவையான தகுதிகள்.
விண்ணப்பிக்கும் பெண்கள் 18 முதல் 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்க்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு இந்த வருமான வரம்பு இல்லை .
விண்ணப்பிக்கும் பெண்களின் கிரெடிட் மற்றும் சிபில் (CIBIL) ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் :
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
அடையாள அட்டையாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளுள் ஒன்று.
முகவரிச் சான்று , குடும்ப வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (பட்டியல் வகுப்பு, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் கிடைக்கும் சலுகை பெற)
வங்கி கணக்குப் புத்தகம் நகல்
நீங்கள் என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்கள், எவ்வளவு செலவாகும், வருவாய் எப்படி கிடைக்கும் போன்ற விவரங்கள் அடங்கிய வணிகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை
வணிகம் செய்ய விரும்பும் துறையில் முந்தைய அனுபவத்திற்கான சான்று அல்லது பயிற்சி சான்றிதழ்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் நகல்
இத்திட்டத்தின் கீழ் மளிகைக் கடை, பேக்கரி, அழகு நிலையம், கேட்டரிங், தையல் கடைகள், பால் உற்பத்தி, காகித தட்டு தயாரித்தல் ,மண்பாண்டத் தயாரிப்பு, சிறிய உணவகம் உள்ளிட்ட மகளிருக்கான 88 வகை சிறு தொழில்களுக்கு கடன் பெற முடியும். .
விண்ணப்பிக்கும் முறை :
இத்திட்டம் குறித்த முழுமையான வழிகாட்டுதல்களைப் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான myScheme Portal ஐப் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது பெண்களுக்கான மேம்பாட்டுக் கழகத்தின் கிளைகளை அணுகியும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
என்ன பெண்களே? பாதி கடன் செலுத்தினால் போதும் என்பது மகிழ்ச்சி தானே?