

“யானை வரும் முன்னே மணியோசை வரும்” என்பது போல் "தேர்தல் வரும் முன்னே பறக்கும் படை வரும்" என்று சொல்வது தற்போதைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதே இந்தப் படைகளின் முக்கியப் பணியாகும்.
பறக்கும் படை (Flying Squad) என்பது அவசரநிலை, சட்டம்-ஒழுங்கு அல்லது திடீர் சோதனை போன்ற சூழ்நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட சிறப்பு குழுவாகும். இந்தப்படை காவல்துறை ,தேர்தல், வரித்துறை ,மருத்துவம் என நான்கு பிரிவுகளில் செயல்படுகிறது:
காவல்துறையின் பறக்கும் படை என்பது கொள்ளை, கலவரம் போன்ற நேரங்களில் வேகமாக சென்று நடவடிக்கை எடுக்கும் குழு. தேர்தல் கால பறக்கும் படை தேர்தல் ஆணையம் கீழ் (Election Commission of India )தேர்தல் நேரங்களில் வாக்கு வாங்கல், பண விநியோகம், சட்டவிரோத பொருட்கள் போன்றவற்றை தடுக்க அமைக்கப்படும்.
வருமானவரி, வாணிபவரி போன்ற துறைகளில் திடீர் ரெய்டுகள் ,வரி ஏய்ப்பு கண்டறிதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். மருத்துவத்தில் விபத்து போன்ற எதிர்பாராத நேரங்களில் ICU வசதியுடன் ஆம்புலன்ஸ் வசதிகளை விரைந்து செயல்படுத்த “Flying Squad Ambulance” என்ற பெயரில் சேவைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பறக்கும் படையினரும் இனி பிஸியாகி விடுவார்கள். பறக்கும் படை அப்படி என்ன தான் செய்வார்கள்.
தேர்தல் பறக்கும் படையின் பணிகள் :
தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்தவுடன் இவர்களின் பணி தொடங்குகிறது:
வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுத்தல்.
சட்டவிரோதப் பிரச்சாரங்கள் மற்றும் அனுமதியற்ற கூட்டங்களைக் கண்காணித்தல்.
அதிநவீன ஆயுதங்கள் இன்றி வாகனச் சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல்.
குழுவின் அமைப்பு :
பொதுவாக ஒரு பறக்கும் படையில் ஒரு நிர்வாக அதிகாரி (Tahsildar அல்லது RDO நிலை) ,ஒரு காவல் அதிகாரி ,வீடியோ பதிவு அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். தேவைப்பட்டால் உதவி பணியாளர்களும் அமர்த்தப்படலாம்.
காவல் அதிகாரி ஓகே..எதற்கு வீடியோகிராபர்...இங்கு இவரது பணிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஆம் சந்தேகத்துக்குரிய காரை நிறுத்தியவுடன் நிகழும் அனைத்து சோதனைகளும் பேசுவதுடன் வீடியோவாக பதிவு செய்யப்படும்.இந்த விடியோ தான் நீதிமன்றத்தில் சாட்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பறக்கும் படையினர் தங்களுக்கு கிடைக்கும் புகார் பேரில், திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு பெரிய தொகை பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என கண்காணிக்கும். உடனடி விசாரணை செய்து சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இவர்கள் பணி. ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் மூன்று பறக்கும் படையினர் வீதம் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.
உங்கள் பகுதியில் இது போன்ற விதிமீறல்கள் பற்றிய தகவல் தெரிந்தால் நீங்கள் cVIGIL மொபைல் ஆப் மூலம் (தேர்தல் ஆணையம் வழங்கியது) இடம், நேரம், புகைப்படம், வீடியோ ஆகிய தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்தால் அடுத்த 100வது நிமிடத்தில் பறக்கும் படை நீங்கள் சொன்ன பகுதிக்கு சென்று கண்காணிப்பார்கள். மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் 1950 எனும் எண்ணில் இயங்கும் ஹெல்ப்லைனையும் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். (தேர்தல் வாக்காளர் ஹெல்ப்லைன் (Toll-Free): 1800-11-1950)
கடந்த 2021 தேர்தலின் போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ₹3.21 கோடி, சென்னையில் ₹52 லட்சம் எனப் பல கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாகக் கொண்டு செல்லப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் உரிய ஆவணங்களின்றி ₹52 லட்சம் பறிமுதல். சேலம் மாவட்டத்தில் ₹15.37 லட்சம் பறிமுதல்.
திருச்சிராப்பள்ளியில் ஒரு வாகனத்தில் ₹1 கோடி பறிமுதல் செய்தது போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ரூபாய் 50,000 மட்டுமே காரில் கொண்டு செல்ல அனுமதிக்கும் விதிமுறை தேர்தல் நேரத்தில் உள்ளது. அதை மீறும் பட்சத்தில் அந்த தொகை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னே சட்ட நடவடிக்கைகள் முடித்து உரிமையாளர் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். குறிப்பாக பரிசு பொருள்களோ அல்லது மது பாட்டில்களோ இருந்தால் விதிமுறைகள் மேலும் கடுமையாக பின்பற்றப்படும்.
இதில் பொதுமக்களும் சரியான ஆவணங்கள் இன்றி ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்வது சிக்கலான விஷயம் என்பதை அறிந்து தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த தேர்தலில் பறக்கும் படையினர் தயாராக இருக்கிறார்கள். எந்தக் கட்சியினர் இதில் அதிகம் சிக்கப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.