
2019-ம் ஆண்டு சீனாவில் தொடக்கப் புள்ளியை ஆரம்பித்த கொரோனா நோய் கொஞ்சம் கொஞ்சமாகவும், நாளடைவில் கொத்து கொத்தாகவும் பரவி நாடு முழுவதும் புற்றீசல் போல தொற்றியது. இந்த தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தனிமனிதன் முதல் நாடுகள் வரை அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியிலும், உடல் அளவிலும் பல்வேறு தாக்கங்களை சந்தித்தனர். இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகளவில் இருந்தது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்தது. இந்திய பொருளாதாரம் சரிந்தது. ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசில் உருமாற்றங்கள் ஏற்பட்டு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது.
ஆனால், கொரோனா அசூரன் முடிந்தான் என்று நினைத்த நிலையில் தற்போது புதுப்புது வடிவங்களில் உருமாறி மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, குஜராத், போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ள இந்த தொற்று தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது 4 ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4026 ஆக உயர்ந்ததுள்ளது.
மாநிலங்கள் வாரியாக பரவலை கணக்கிடும்போது, கேரளாவே இன்னும் அதிக பாதிப்பில் இருப்பதுடன் முதலிடத்திலும் உள்ளது. அங்கு 1,416 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதித்தோரின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் தொற்றுக்கு நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 215 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெதுவாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 37 பேர் இறந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் 32 ஆக இருந்த மொத்த உயிர்ப்பலி நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த காரணத்தால் பலி எண்ணிக்கை 37 ஆனது.
கேரளாவில் ஒருவர், மகாராஷ்டிராவில் 2 பேர், தமிழ்நாட்டில் ஒருவர், மேற்கு வங்காளத்தில் ஒருவர் என 5 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்தனர்.