
கொரோனா நோய்த் தொற்று ஒட்டு மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்ட ஒரு அசூரன். தனிமனிதன் முதல் நாடுகள் வரை அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியிலும், உடல் அளவிலும் பல்வேறு தாக்கங்களை சந்தித்தனர். அதிலும் அந்த நேரத்தில் பொருளாதார சரிவில் சிக்கி இன்னும் மீண்டெழ முடியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
2019-ம் ஆண்டு சீனாவில் தொடக்கப் புள்ளியை ஆரம்பித்த கொரோனா நோய் கொஞ்சம் கொஞ்சமாகவும், நாளடைவில் கொத்து கொத்தாகவும் பரவி நாடு முழுவதும் புற்றீசல் போல தொற்றியது. புதிய வைரஸ் தொற்று என்பதால், அதில் இருந்து பாதுகாக்க போதுமான மருத்துவ வசதிகளும் ஆரம்பத்தில் இல்லை. இதனையடுத்து அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின. அதன் பின்னரே கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் கடந்த மே மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் 199 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று புதிதாக 14 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கும், நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்வதற்கும் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் மிக முக்கியமானது. அதற்கு செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் குறித்த பட்டியல் இது.
மாறுபாடுகளும்..அறிகுறிகளும்..!
தற்போது பரவும் ஜே.என்.1, கொரோனா வைரசில் மிகச்சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையை சேர்ந்தது. இது அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, வறட்டு இருமல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கிறது. சிலருக்கு உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, இரப்பை, குடல் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஜே.என்.1 மட்டுமின்றி என்.பி.1.8.1 மற்றும் எல்.எப்.7 போன்ற வைரஸ்களும் இந்தியாவில் புதிதாக பரவி வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பரவிய ஒமிக்ரான், டெல்டா போன்ற வைரஸ் மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது இவை முற்றிலும் வேறுபட்டது. அவைகளுடன் ஒப்பிடும்போது இந்த வைரஸ்களின் அறிகுறிகள் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை.
அதனால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த வைரஸின் மாறுபாடு லேசானது முதல் கடுமையான சளி வரை பொதுவான அறிகுறிகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருப்பவர்களை தாக்கினாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற கொரோனா வைரஸ் மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது வேகமாக பரவுவதாக அறியப்படுகிறது. அதேவேளையில் லேசான நோய்த்தொற்றையே ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
செய்ய வேண்டியவை:
முக கவசம்
பொது இடங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு சென்றால் மூக்கு, வாய் இரண்டையும் நன்கு மறைக்கும் விதமான முக கவசத்தை அணியுங்கள். என்95 அல்லது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முக கவசமாக இருப்பது சிறந்தது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தது 6 அடி தூரம் விலகியே இருங்கள்.
திருமணங்கள், விருந்துகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட நெரிசலான இடங்கள் மற்றும் பெரிய அளவில் கூட்டம் கூடும் இடங்களை கூடுமானவரை தவிருங்கள்.
சுகாதாரம்
வெளியே சென்று வந்தால் வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடிகள் சுத்தம் செய்யுங்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவுங்கள். சோப்புக்கு மாற்றாக ஆல்கஹால் சார்ந்த (சானிடைசர்) கை சுத்திகரிப்பானையும் பயன்படுத்தலாம்.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், வாசனை இழப்பு, உணவின் சுவை அறியும் திறன் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். அறிகுறிகள் மோசமடைந்தால் உடனடியாக மருத்துவர் உதவியை நாடுங்கள்.
தனிமை
உங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலோ அல்லது கொரோனா பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தாலோ, பரிந்துரைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை கண்டிப்பாகப் பின்பற்றவும். உடல் ரீதியான தொடர்பைத் தவிர்க்கவும்.
சுத்தம்
வீட்டிலும், பணியிடத்திலும் கைகளால் அடிக்கடி தொடும் இடங்களை தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யவும். கைகளுக்கும் சானிடைசர் பயன்படுத்தவும்.
அறைக்குள் புதிய காற்று சுழற்சியை அனுமதிக்கும் விதமாக ஜன்னல்களைத் திறந்து வைக்கவும். அறைக்குள் வெளிக்காற்று உள் நுழைந்து வெளியேறும் வகையில் காற்றோட்டமான சூழலை பராமரிக்கவும்.
தகவல்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் உள்ளூர் சுகாதார மையம் போன்ற நம்பகமான இடங்களில் இருந்து வரும் வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றவும்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்கவும்.
உணவு
பழங்கள், காய்கறிகள் மற்றும் திரவங்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும். மது பழக்கம் மற்றும் துரித உணவை தவிர்க்கவும். எப்போதும் நீரேற்றமாக இருங்கள்.
செய்யக்கூடாதவை
கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். பரிசோதனை செய்வதற்கு காலதாமதம் செய்யாதீர்கள்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் கடுமையான பாதிப்புகளை தடுக்கலாம்.
பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளாதீர்கள். அடிக்கடி முக கவசத்தை கழற்றி மாட்டாதீர்கள்.
முகம் மற்றும் முக கவசத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்.
சுய மருத்துவம் செய்ய வேண்டாம். மருத்துவரை அணுகாமல் எந்தவொரு மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சரிபார்க்கப்படாத தகவல்கள் அல்லது வதந்திகளை பகிர்வதைத் தவிர்க்கவும்.
உண்மை அடிப்படையிலான தகவல் தொடர்பை மட்டும் நம்புங்கள். சமூக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
மன ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
பதற்றம், மனச்சோர்வு நீடித்தால் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களின் ஆதரவை நாடுங்கள்.