vishal
vishal

நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் ! ஐகோர்ட்டு உத்தரவு!

Published on

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது தயாரிப்புநிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்துரூ.21.29 கோடியை கடனாகப் பெற்றிருந்தார். இத்தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு அன்புச்செழியனுக்கு செலுத்தியது.

இதுதொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடவும், அதன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

high court
high court

இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ரூ.15 கோடியை நடிகர் விஷால் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து விஷால்செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘தனி நீதிபதியின்உத்தரவுப்படி ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதியுதவி செய்யும் எந்த புதிய படங்களையும், எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது’’ என்று இடைக்கால தடை விதித்துள்ளனர்.

மேலும் அந்த உத்தரவு தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கக்கூடிய படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடிதளங்களில் வெளியிடக்கூடாது என்று தடை விதித்து விஷாலின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com