அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மூன்று கார்களில் இறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அந்தக் கட்சியின் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று காலையிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகின்றது.
புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் மதுரை மற்றும் சென்னையிலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 8 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் பலமுறை அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையும் சோதனை நடத்தியது. அதேபோல் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின்போதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதனையடுத்து தற்போது இந்த லோக்சபா தேர்தல் சமையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கிடைத்தத் தகவலின்படி தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
விராலிமலை எம்.எல்.ஏ வாக இருக்கும் சி. விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகவும் குட்கா முறைக்கேடு உள்ளிட்ட காரணங்களாலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்துச் சோதனை நடத்தி வந்தனர். அந்தச் சோதனையில் கிடைத்தத் தகவலின் அடிப்படையில்தான் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறது.
விஜயபாஸ்கருக்குச் சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதி தந்ததைவிட அதிகமாக எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் கல்குவாரிகளிலும் அப்போது சோதனை நடத்தப்பட்டது.
தற்போது வீட்டில் சோதனை செய்ததையடுத்து கல்குவாரிகளிலும் சோதனை நடத்தப்படும் என்றுச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் முழு சோதனையும் முடிந்த பின்னரே சோதனை பற்றிய முழுத் தகவலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.