

ஏழை மற்றும் எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க, மாநில மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் வீட்டு வசதி வாரியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் (TNHB), மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டமும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி வழங்கி வருகிறது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, நகர்ப்புற வாழ்விட வாரியத் திட்டங்களில் வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவைக் குறைக்க ரூ.76 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு. இந்நிலையில் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வாங்க விரும்புவோர், இனி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்டத்திற்கு ஏற்ப, மாநில மற்றும் மத்திய அரசுகளின் பங்களிப்பு இதில் 90% வரை இருக்கும். மீதமுள்ள 10% பணத்தை பயனாளிகள் தான் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை செலுத்த பலரும் கடன் வாங்கும் சூழலில் தான், அவர்களுக்கு உதவும் விதமாக ரூ.76 கோடியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. இதன்மூலம் கடன் வாங்காமலேயே ஒருவரால் வீட்டு வசதி வாரியத் திட்டத்தின் மூலம் வீட்டைக் கட்ட முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
வீட்டு வசதி வாரியத் திட்டத்தின் கீழ் வீடு அல்லது மனை வாங்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நேரில் சென்று அணுக வேண்டியது அவசியம். இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இனி வீடு அல்லது மனை வாங்க ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யவும், விண்ணப்பிக்கவும் முடியும். இதற்காக தமிழக அரசு ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி, அறிமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.
விற்பனைக்குத் தயாராக இருக்கும் வீடு அல்லது மனை உள்ளிட்டவற்றின் விவரங்களை வீட்டு வசதி வாரியம் அவபோது இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். இப்படி புதிதாக வீடு அல்லது மனை குறித்த விவரங்கள் வெளியாகும் போது, அது குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை அணுகினால், தகுந்த ஒத்துழைப்பு தர மறுப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் வீடு அல்லது மனை குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வீட்டு மனைகளைத் தேர்வு செய்யவும் மற்றும் முன்பதிவு செய்யவும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி https://propertysales.tnhb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர், முகவரி, இமெயில் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிட்டால் போதும்.
வீட்டு வசதி வாரிய விற்பனைப் பிரிவு அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டு வீடு மற்றும் மனையைத் தேர்வு செய்வது முதல், முன்பதிவு செய்வது வரை அனைத்து தகவல்களையும் வழங்குவர். இந்த இணையதளம் வீட்டு வசதி திட்டங்களில் வீடு மற்றும் மனை விற்பனைக்கு என்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.