ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா செல்லவுள்ளார். இந்த இருநாடுகளின் கூட்டணி தற்போது அமெரிக்காவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மெனி, இங்கிலாந்து போன்ற சில நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. ரஷ்யா மிகப்பெரிய நாடு என்பதால், அணு ஆயுதங்களுக்கும் வீரர்களுக்கும் பஞ்சமே இல்லை.
அந்தவகையில் ரஷ்யா மீது உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதில் உக்ரைன், ஜெர்மனி நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அது ரஷ்யாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ரஷ்யாவிடம் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உக்ரைனிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை.
ஆகையால்தான் ரஷ்யா தைரியத்துடன் இத்தனை வருடங்களாகப் போர் செய்து வருகிறது. தற்போது ஜெர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியது ரஷ்யாவை எதிர்ப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது. ஆகையால், ரஷ்யாவின் கவனம் ஜெர்மனி பக்கம் திரும்பியுள்ளது. இதனால், ரஷ்யா அந்த நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தது.
ரஷ்யாவின் சில பகுதிகள் மீது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.
அந்தவகையில் தற்போது இந்த போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஷ்யா அதிபர் இன்று மற்றும் நாளை வடகொரியா செல்லவுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு மந்திரி ஆண்ட்ரி பெலோசோவ், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் ஆகியோர் தூதுக்குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
அதாவது ரஷ்ய அதிபரின் இந்த பயணம் வடகொரியாவுடனான அணு ஆயுதம் ஒப்பந்தமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த செப்டம்பரில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போது புதினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். புதின் கடைசியாக ஜூலை 2000 இல் பியாங்யாங்கிற்குச் சென்றார்.
ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான இந்த புதிய கூட்டாண்மை அமெரிக்காவை கவலையடைய செய்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவாக புதின் ஆயுதங்களைத் தேடுவது "நிச்சயம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.
புதினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் கூறுகையில், "ரஷ்யாவும் வடகொரியாவும் பாதுகாப்பு பிரச்சனைகள் அடங்கிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். இந்த ஒப்பந்தம் வேறு எந்த நாட்டிற்கும் எதிரானதாக இருக்காது. ஆனால் மேலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கோடிட்டுக் காட்டுவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே - சர்வதேச அரசியல் துறையில், என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொண்டு கையெழுத்திடப்படும்." என்று கூறினார்.
வடகொரியாவுக்குப் பிறகு, புதின் ஜூன் 19-20 தேதிகளில் வியட்நாமுக்கு விஜயம் செய்வார் என்று கூறப்படுகிறது.