வந்தியத்தேவனாக நடித்த பிறகு இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது - நடிகர் கார்த்தி கல கல பேச்சு!

கார்த்தி
கார்த்தி
Published on

வந்தியத்தேவனாக நடித்தபின் இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது என பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட, மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டர்களை வெளியிட்டு இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 29.03.2023 அன்று நடைபெறும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் திரைத்துரையினர் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் வந்தியத்தேவனாக நடித்து வரும் நடிகர் கார்த்தி பேசினார். அப்போது "கோவிட் முடிந்து திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் மிகப் பெரிய சாதனைகளை செய்துள்ளது. நான் கைதி படப்பிடிப்பில் இருந்தபோது மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.

வந்தியத்தேவனாக நடிக்கிறீயா என்றார். ஓகே சொல்லிவிட்டு மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி வசனம் எல்லாம் மனதில் ஓடியது என்று பேசிக்காட்டினார். அவர் சொன்னதை மட்டும் செய்தால் போதும். அதிகமாக செய்யக்கூடாது. வந்தியத்தேவனாக நடித்த பிறகு இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது.” என தனது வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை சிரித்துக்கொண்டே கார்த்தி தெரிவித்தார்.

ஏற்கனவே வந்தியத்தேவன் மற்றும் குந்தவை பதிவுகள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வைரலாக பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com