காலநிலை மாற்றத்தால், சமீபக்காலமாக வறட்சியான பாலைவனப் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. சில நாட்களுக்கு முன்னர் துபாயில் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது சவுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒருபக்கம் உலகம் முழுவதும் போர், தீவிரவாதம், சர்வாதிகாரம், வறுமை போன்ற பல பிரச்சனைகள் தலை விரித்தாடும் நேரத்தில், மற்றொரு பக்கம் காலநிலை மாற்றத்தினால் பல பிரச்சனைகளும் வருகின்றன. உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தால், அதிக வெப்பம் அல்லது அதிக மழை என வலுவானப் பேரிடர்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஐநாவும் உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு உயரப் போகிறது என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் தற்போது சவுதியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இன்னும் மோசமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாலைவனங்களால் சூழப்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் எப்போதும் வறட்சியே காணப்படும். அங்கு பொதுவாக ஒரு ஆண்டிற்கு சில செமீ அளவு மழை பெய்வதே அதிசயம். ஆனால், இந்தாண்டு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட துபாயில் வரலாறு காணாத மழை பெய்தது.
இதனையடுத்து இப்போது சவுதியிலும் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், இன்னும் சில நாட்கள் இடி மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்பதால் மதீனா பிராந்தியத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக சவுதி முழுக்க கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் 10 மிமீ முதல் 50 மிமீ வரை மழை பெய்யும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல் கஹ்தானி கேட்டுக் கொண்டுள்ளார். அதீத காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓமன் பகுதியிலும் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.