

ஈரான் போருக்கு முன்பு வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 80 டாலருக்கே கிடைத்த நிலையில் தற்போது 150 டாலருக்கு மேல் தான் கிடைக்கிறது.
கடந்த ஒரு மாத காலத்தில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தும் இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கட்டுப்படுத்தி வந்தன.
இந்நிலையில் பெங்களூருவில் ஷெல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.41 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பெட்ரோல் விலை ரூ.119.85 ஆகவும், அதன் பிரீமியம் ரகமான பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.129.85 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாதாரண வகை டீசலின் விலை ரூ.123.52 ஆகவும், பிரீமியம் வகை டீசலின் விலை ரூ.133.52 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்திய நிலையில், ஷெல் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் போர் சூழல் காரணமாகவும் நஷ்டத்தை குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.