

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 2 மாதங்கள் முடிகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய விஜய் தலைமையிலான அரசு முந்தைய ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தி விடாமல் தொடர்ந்து அப்படியே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் வகையில் மலிவான விலையில் தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் அம்மா உணவகம் திட்டம். வீடு இல்லாமல் தெருவோரம் வசிப்பவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், வேலை தேடுபவர்கள் போன்ற அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
முதலில் சென்னையில் தான் அத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது ஆட்சி காலத்தில் படிப்படியாக சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தற்போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 620 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பிற மாவட்டங்களில் (மாநகராட்சிகள் & நகராட்சிகள்) 237 மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 383 என மொத்தம் 620 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்களுக்கான போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அந்த திட்டம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களை மேம்படுத்த பல உத்தரவுகளை அண்மையில் பிறப்பித்தார்.
இங்கு குறைந்த விலையில் காலை, மதியம், இரவு உணவுகள் விற்கப்பட்டன. 1 ரூபாய்க்கே உணவுகள் கிடைத்ததால் ஏழை எளிய மக்கள் பலருக்கும் முக்கிய உணவு ஆதாரமாக அம்மா உணவகங்கள் அமைந்தன. காலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு குழம்பு 3 ரூபாய்க்கு என மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அம்மா உணவகங்களில் நாளொன்றுக்கு ரூ.20 செலவில் 3 வேளை உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் இந்த திட்டம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அம்மா உணவகங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துபழையபடி செயல்பட வைத்தது. மேலும் அம்மா உணவகத்தின் தரத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் மற்றும் உணவு தரத்தை மேம்படுத்தியதன் காரணமாக, இங்கு வந்து உணவுவருந்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை, அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வரும் மக்களின் எண்ணிக்கை சராசரியாக 67,000 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் அதாவது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 31.23 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவருந்தி பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தற்போது சராசரியாக, தினமும் 1.04 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் பசியாற்றி வரும் நிலையில், இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் தினசரி சராசரி வருவாய் ரூ.4.53 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான சமையல் உபகரணங்களை வாங்கவும், சுகாதாரமான மற்றும் தரமான உணவை மக்களுக்கு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுத்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஆட்சியில் சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களில் சுமார் 17.6 கோடி ரூபாய் செலவில் பெரிய அளவிலான புதுப்பித்தல் பணிகள் நடத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் மூத்த அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து உணவு தரத்தை உறுதி செய்ததும் அம்மா உணவகங்களை நோக்கி மீண்டும் மக்கள் அதிகளவில் வருகை தருவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் கிடைத்தது போன்று தற்போது அம்மா உணவகங்களில் தரமான உணவு கிடைப்பதால் ஏழை எளிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக புது அரசு அமைந்தால் பழைய அரசின் திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அந்த நடைமுறை ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் நடந்து வருகிறது.
ஆனால் அந்த விதிவிலக்கை மாற்றி விஜய் தலைமையிலான அரசு முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் தொடரும் என அறிவித்து அம்மா உணவகங்கள், மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன் உள்ளிட்டவற்றை அப்படியே தொடர்ந்து வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.