அம்மா உணவகத்தில் நடக்கும் நூதன மோசடி: ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி 10 ரூபாய்க்கு விற்பனை..!

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி அதை தனியார் ஹோட்டல்களில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Amma unavagam
Amma unavagam
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்களுக்கு எப்போது வந்தாலும் இட்லியே கிடைப்பதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள், மொத்தமாக ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் வகையில் மலிவான விலையில் தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் அம்மா உணவகம் திட்டம். முதலில் சென்னையில் தான் அத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அவரது ஆட்சி காலத்தில் சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பிற மாநகராட்சி பகுதிகளில் 108, நகராட்சிகளில் 139, ஊரகப் பகுதிகளில் 4 என மொத்தம் 658 அம்மா உணவகங்களை ஜெயலலிதா தொடங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்களுக்கான போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அந்த திட்டம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களை மேம்படுத்த பல உத்தரவுகளை அண்மையில் பிறப்பித்தார்.

வீடு இல்லாமல் தெருவோரம் வசிப்பவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியோரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகங்கள் கொண்டு வரப்பட்டன. இத்திட்டம் தற்போதும் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இங்கு காலையல் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு குழம்பு 3 ரூபாய்க்கு என மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அம்மா உணவகங்களில் நாளொன்றுக்கு ரூ.20 செலவில் 3 வேளை உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் இந்த திட்டம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

amma unavagam idli
amma unavagam idli image credit- justdial.com

இந்நிலையில் தான் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அம்மா உணவகத்தில் நாள்தோறும் முதியவர்கள், பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் உணவருந்தி வருகின்றனர்.

சமீப காலமாக இந்த அம்மா உணவகத்தில் எந்த எப்போது சென்றாலும் இட்லி கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த அம்மா உணவகத்தில் தினமும் காலையில் கிட்டத்தட்ட 1,200 இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன. காலை 7 மணிக்கு அந்த அம்மா உணவகத்தில் இட்லி விற்பனை தொடங்கும் நிலையில், அரை மணி நேரத்திலேயே 1,200 இட்லிகளும் காலியாகி விடுவதாக உணவக ஊழியர்கள் கூறி விடுகின்றனர்.

இதனால், பசியாற இங்கு வரும் ஏழை மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தினந்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அம்மா உணவகம் மாடல் இனி டெல்லியிலும்: ரூ. 5-க்கு சத்தான 'தாலி' உணவு!
Amma unavagam

இந்நிலையில், இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள், காலையிலேயே சிறு சிறு ஓட்டல்களுக்கு மொத்த மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக, அம்மா உணவகத்தில் யாருக்கும் பார்சல் வழங்கக் கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. அங்கு சென்று அங்கேயே சாப்பிடுவது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி இங்கு வந்து கேட்பவர்கள் அனைவருக்கும் பார்சல் வழங்கப்படுவதால் சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் அதிகாரிகள் சொன்னதைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல் அம்மா உணவகங்களில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக் கூடாது என்பது அரசு விதிமுறையாக உள்ளது. ஆனால், இங்கு பார்சல் இட்லி வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் கவரில் இட்லி வழங்கும் நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி விட்டு, வெளியே சென்று பத்து ரூபாய் வரை ஹோட்டல்களில் விற்பனை செய்வதாகவும், இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
திமுகவின் மோசமான நிர்வாக குறைபாடுகள் அம்மா உணவகங்கள் நிலை குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
Amma unavagam

மேலும் அரசு மானியத்தில் இயங்கும் அம்மா உணவகங்கள், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com