

ராணுவத்தில் (Indian Army) சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆசை பல்வேறு இளைஞர்களுக்கும். அந்த வகையில் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பும் இளைஞர்களுக்கான அறிவிப்பாக 2027-ம் ஆண்டுக்கான அக்னிவீர் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தித்தின் கீழ் பொதுப் பணி, தொழில்நுட்பம், கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆயுதப்பிரிவு, பெண் ராணுவ காவல், பார்மா ஆகிய பல்வேறு பிரிவுகளின் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வசிப்பவர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல் வரும் கையில் ரூ.21,000, இரண்டாம் வருடம் ரூ.23,000, மூன்றாம் வருடம் ரூ.25,550, நான்காம் வருடம் ரூ.28,000 என வழங்கப்படும். 4 வருடங்களுக்கு பின்னர் வெளியில் செல்லும்போது சேவா நிதியாக பிடிக்கப்பட்ட ரூ.5,02 லட்சம் மற்றும் அரசு தரப்பு ரூ.5.02 என ரூ.10.4 லட்சம் வழங்கப்படும்.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தித்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் அக்னிவீரர்கள் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பனவற்றை இங்கு காணலாம்.
அக்னிவீரர் தகுதிகள் என்னென்ன?
* பொதுப் பணி(ஜெனரல் டூட்டி) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
* டிரைவர் பணிகளுக்கு எல்.எம்.வி லைசன்ஸ் (இலகுரக அல்லது கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம்)வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* தொழில் நுட்பம் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பில் அறிவியல், இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவு எடுத்து படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது கட்டாயம். அல்லது 2 வருட தொழில்பிரிவு அல்லது தொழில்பிரிவு அல்லாத படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* கிளார்க்/ ஸ்டோர் கீப்பர் ஆகிய பிரிவுகளுக்கு 12-ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், கணக்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தொழிற்பிரிவு இடங்களுக்கு 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பெண் ராணுவ காவல் பிரிவிற்கு 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
* பார்மா சிப்பாய் பிரிவிற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பி.பார்ம் அல்லது டி.பார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை விண்ணப்பதாரரக்ள் (https://www.joinindianarmy.nic.in/) என்ற அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளலாம்.
உடற்தகுதிகள்
* தென் இந்தியாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதியின்படி, பொது மற்றும் ஆயுதப்பிரிவிற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் உயரம் 166 ஆக இருக்க வேண்டும்.
* தொழில்நுட்பப் பிரிவிற்கு 165 மற்றும் கிளார்க் பிரிவிற்கு 162 வரை இருக்கலாம். மார்பக அளவு 77 செ.மீ வரை இருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ப எடை பின்பற்றப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
* இப்பிரிவு ராணுவ சேர்க்கைக்கான வயது வரம்பு 17.5 முதல் 22 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01-7-2005 முதல் 01-07-2009 தேதிக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப பிரிவு சிப்பாய்க்கு 23 வரையும், பார்மசி பிரிவிற்கு 25 வரையும் வழங்கப்படுகிறது.
* அக்னிபாத் திட்டத்தின் கீழ்நியமிக்கப்படும் வீரர்களுக்கு 6 மாதம் பயிற்சி நடத்தப்படும்.
சம்பளத்தை பொறுத்தவரை அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
அக்னிவீரர்கள் பொது நுழைவுத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
* ஆன்லைன் நுழைவுத்தேர்வு முதல் கட்ட தேர்வாக நடைபெறும்.
* இரண்டாவது கட்டமாக உடல் தகுதி, உடல் அளவீட்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
* கிளார்க் பிரிவு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தட்டச்சு தேர்வு நடைபெறும்.
* விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://www.joinindianarmy.nic.in/) என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி அன்று தொடங்கியது. வரும் ஏப்ரல் 1-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூன் 1-ம்தேதி முதல் ஜூன் 15-ம்தேதி வரை நடைபெறும் என நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.