
இந்தியாவின் விவசாய மற்றும் மீன்வள ஏற்றுமதி தற்போது ₹4.5 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், இதை ₹20 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புது தில்லியில் நடைபெற்ற ICC: கிருஷி விக்ரம் கருத்தரங்கில் பேசிய அவர்,
உணவு பதப்படுத்துதல், பிராண்டிங், மற்றும் உயர்ந்த பேக்கேஜிங்தரங்களே இந்த இலக்கை அடையும் முக்கிய வழி என்று வலியுறுத்தினார்.
புதிய சந்தைகளில் இந்திய பொருட்கள்
இந்தியாவின் ஜாமுன் இங்கிலாந்து சந்தைகளையும், பஞ்சாப் லிச்சிகள் தோஹா மற்றும் துபாயையும் சென்றடைந்துள்ளன. அன்னாசி, சுரைக்காய் போன்ற புதிய பொருட்களின் ஏற்றுமதியும் வேகம் பெற்று வருகிறது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் இந்திய பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.
மில்லெட்ஸுக்கு உலக அளவில் பாராட்டு
சர்வதேச மில்லெட்ஸ் ஆண்டு - (The International Year of Millets) இது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முயற்சி, இந்தியாவின் பாரம்பரிய தானியங்களை உலக அரங்கில் பிரபலப்படுத்தியுள்ளது."இந்திய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் இன்று உலகளவில் அங்கீகரிக்கப்படுகின்றன," என அமைச்சர் கோயல் பெருமிதத்துடன் கூறினார்.
சொட்டு நீர்ப்பாசனம்: விவசாயத்துக்கு புது புரட்சி
"சொட்டு நீர்ப்பாசனம் இந்திய விவசாயத்தை மாற்றும் ஒரு முக்கிய கருவி. இதை ஒரு தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும்," என்று அமைச்சர் கோயல் அழைப்பு விடுத்தார்.
கிராமங்களில் சிறிய நீர்நிலைகளை உருவாக்குவதும், சொட்டு நீர்ப்பாசனத்தை பரவலாக்குவதும் பயிர் உற்பத்தியை நிலையாக்கி, ஏற்றுமதிக்கு தயாராக்கும் என்றார்.
மேலும், பழைய நீர் பம்புகளை மொபைல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய,ஆற்றல் திறன் கொண்ட ஸ்மார்ட் பம்புகளாக மாற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்."இது நீர் விரயத்தைத் தடுத்து, பயிர் சேதத்தை குறைத்து, விவசாயச் செலவுகளையும் குறைக்கும்," என்று அவர் விளக்கினார்.
ஆர்கானிக் விவசாயத்துக்கு புதிய உயரம்
உலக சந்தைகளில் ஆர்கானிக் பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய ஆர்கானிக் பொருட்களுக்கு வெளிப்படையான சான்றிதழ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது உலக சந்தைகளில் இந்திய பொருட்களின் நம்பகத்தன்மையை உயர்த்தும்," என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மசாலா, காபி ஏற்றுமதியில் முன்னேற்றம்
மஞ்சள் வாரியத்தின் அமைப்பால் மசாலா ஏற்றுமதி வளர்ந்து வருகிறது. காபி ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்துள்ளது."திட்டமிட்ட முயற்சிகள் மூலம் இந்த துறைகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும்," என்று கோயல் கூறினார்.
விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு
பிரதமர் கிசான் யோஜனா: ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ₹6,000 நேரடி நிதி உதவி.
e-NAM தளம்: 1,400 மண்டிகள் இணைக்கப்பட்டு, வெளிப்படையான விலை நிர்ணயம் உறுதி.
விவசாய உள்கட்டமைப்பு நிதி: ₹1 லட்சம் கோடி முதலீட்டில் குளிர்பதன கிடங்குகள், பதப்படுத்தல் மையங்கள் அமைப்பு.
ட்ரோன் திட்டம்: ட்ரோனைப் பயன்படுத்தி உரம் தெளிக்க 1.5 லட்சம் பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த முயற்சி தேவை
"விவசாயிகள், தொழிலதிபர்கள், மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எந்த சவாலையும் வெல்ல முடியும்," என்று அமைச்சர் கோயல் உற்சாகமாகக் கூறினார். பேக்கேஜிங் மற்றும் வடிவமைப்பு புதுமைகளுக்கு அரசு தொடர் ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.
"ஜெய் ஜவான், ஜெய் கிசான்"
லால் பகதூர் சாஸ்திரியின் "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" முழக்கத்திலிருந்து பிரதமர் மோடியின் "ஆத்மநிர்பர் பாரத்" பயணம் வரை, இந்திய விவசாயம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. "நமது மண்ணின் வளம், விவசாயிகளின் உழைப்பு, மற்றும் அரசின் ஆதரவு இந்த இலக்கை சாத்தியமாக்கும்," என்று அமைச்சர் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ₹20 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு இந்திய விவசாயத்தின் புதிய உயரமாக இருக்கும்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர். உழவே சிறந்தது என்று ஐயன் திருவள்ளுவர் குறள் தான் அதை பறை சாற்றுகின்றதே.